ஹேய் தூக்கணாங்குருவி............!
-காருண்யன்-
ஹேய்........ ஹேய்....... தூக்கணாங்குருவி
நீ நின் கூட்டைக் கட்டுவதில் கவனங்கொள்
உன் மூதாதையர் உனக்களித்த
பரம்பரை அலகுகளில் சுமந்துவந்த
வீடுகட்டும் கலை ஞானத்தால்
உன் அழகிய வீட்டைக்கட்டு
உன் எளிய அழகிய வீட்டில்
நின் முன்னோர்களைப்போலவே
காதலையும் சந்தோஷத்தையும்
ஆரவாரத்தையும் பரவவிடு!
மனிதர்களிடம் பணம் என்றொரு பொருளுண்டு
மானுஷீகம் , தர்மம், சமூக நேயமென்ற அவர் நேசமிக்க
உறவுகளுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை.
ஒருவருக்குப் போட்டியாக ஒருவர்
இரண்டு நாலு பத்தென்று
மனிதர்கள் பணமுடுக்கிக் கட்டும் வீடுகள்
ஒருகணம் உனக்கு உயர்ந்தனவாய்க்கூடப்படலாம்
துரோகம் முகமூடி அரிதாரம் ஒப்பனைகள்
காம குரோத அகங்காரப் பேய்களோடும்
குடிகெடுக்கும் சாத்தான்களோடும்
வாழப் பழக்கப்பட்டவர்கள்
அறமற்றுத்தேடிய பொருட்களைப் பதுக்கவும்
சதித்திட்டங்கள் தீட்டிப் பிறரை வாரவும் அவர்கட்கு
பல இரகசிய அறைகள் தேவை
இரண்டு வீடுகள் கட்டிக்கொண்ட
தூக்கணாங்குருவியை என்றாவது உலகம் அறிந்ததுண்டா?
உன் இனம் எண்ணிறந்த தலைமுறையாக
விரும்பிய இடத்தில் வேண்டிய நேரத்தில்
தன்கூட்டைச் சுதந்திரமாக கட்டுவதைப்போலவே
தென்றலும் வெளிச்சமும் தானாக
உள்வரும் எளிய மிருதுவான
உன் நுட்பமான கூட்டைமாத்திரம் பின்னு
தினமும் சங்கீதமும் ஆனந்தமும் பொங்கும்
உன் குதூகலமான வீட்டினுள்
பேராசை மனிதரைப் பார்த்து
வேறெதையும் உள்நுழையவிட்டிடாதே
ஒரு மனிதனாகச் சொல்கிறேன்;
கட்டிடக்காட்டுக்குள் மனிதத்தையும் நிம்மதியையும்
தொலைத்துவிட்டு அலையும் என்
இனத்தைப் பார்த்து உன் வீட்டை மாற்றியமைத்து
இயற்கை வரமான உன் நிம்மதியைத தொலைத்துவிடாதே
என் இனிய பட்சியே சிறிய சிநேகிதனே
உன் அழகான தனித்துவமான
கூட்டைக்கட்டுவதில் மாத்திரம் நீ கவனங்கொள்!
16.04.2002 ----- பேர்லின்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-03-13