மண்.
ஈழம் எங்கள் கனவு தேசம்
பொன் விழைக்கும் செம்மண் பூமி
கருப்பனீர் சுவையோடொக்கும்
கூவல்கள் நிறைந்த நாட்டின்
முடிசூடா மன்னர் நாங்கள்
ஆனாலும்..................
நாமங்கு ஆண்டு சுகித்திருக்க
குறு நிலமும் இருந்ததில்லை
குழி நிலமும் வாய்த்ததில்லை
முன்றிலில் தோடை பலா
கிணற்றண்டை இளங்கமுகு
வேலியில் நெடும் பனைகள்
வட மேற்கில் அரிநெல்லி
பின் வளவில் கப்பல் வாழை
காய்த்ததென்ற கதையில்லை
சம்பாக்கதிர் விளையும் பசும்
புலங்கள் பார்க்க சுகம்
புகையிலை குடை விரிக்கும் - அதுவும்
ஆண்டான் 'தறை’ யிலல்லோ
புசித்தோர் புசித்திருக்க
பசித்தோர் பசித்திருந்தோம்
மாங்குயில் கூவுஞ்சோலை
கனவுகளில் மட்டும்வரும்
கமக்காரன் காணி பின்னால்
புறம்போக்கில் ஒரு குடிசை
வீறோடு வெள்ளெருக்கு
சடைத்திருக்கும் நன்னிலத்தில்
முன்னாலே பிரண்டைக்கொடி
பின்பக்கம் விடத்தல் மண்டி
நீக்கமறத் தரை யேகம்
பூத்திருக்கும் நெருஞ்சிப் பூக்கள்
நுனிவிரலில் சம நிலையில்
பார்த்து நடக்க வேணும்
கப்பல் கட்டி ஆண்டோமில்லை
கால்நடைகள் கொண்டோமில்லை
நினைத்த நேரந்தான் குளிக்க
கிணறுதானும் இருந்ததில்லை
தரிசினில்தான் பிழைத்தோம்
வளமெல்லாம் வாழ்ந்தோர் கையில்
இப்பரதேசி நாடகன்று
ஆண்டுகள் பலவுமாச்சு............
இருந்தும் என் சிந்தையிலே
எதற்கின்னும் புதைந்திருக்கு
அப்பொட்டல் கரம்பன் புலம் ?
- காருண்யன் -
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-01-01