மைதானம்
- காருண்யன்-
பேர்லின் பிரிசுவர் இருந்ததுக்கு அணுக்கம்
நம் வீடுள்ள வீதிக்கு மேற்கே
விரிந்திருக்கிறது அம்மைதானம்.
எப்போதாவது நாலு சிறுவர் சேர்ந்தால்
சைக்கிள் விடுவர் அல்லது உதைபந்தாடுவர்.
மறுபடி அங்கதன்-----
புல்லை மிதிக்கும் ஒரு குருவியை
காக்கையை காண்டிடலரிது
ஒரு நாளங்கு இத்தாலியிருந்து
'புறொங்காலி' என்றொரு சேர்க்கஸ் வந்தது
கூடாரம் விரித்தது காட்சிகள் போட்டது
விண்தொட்டாடும் ஊஞ்சல்கள் விதூஷகம்
பண்ணக் கோமாளிக் கூட்டங்கள்
ஆயிரக் கணக்கில் மாந்தர்கள் கூடினர்
சகல சந்திலும் வாகனம் தரித்தது
சுவைமிகு தீனொடு கடைகள் பரவின
பியர் பீப்பாய்கள் பீறிட்டுப்பாய்ந்தன
மூன்றுமாதம் அமர்க்களம் போங்கள்!
எங்கள் குழந்தைகள் தினம் "சர்க்கஸ்” என்றனர்
நுழைவுக்கிரையம் யாதென்று உசாவினேன்
அய்யகோ எம்மாத 'பட்ஜட்டின் பாதி'யாமஃது
ஏழை மனமோ நாளும் சபிக்கும்
நாளும் சாக்குச் சொல்லித் தவிர்க்கும்!
கூடாரம் தாண்டிச் சென்றிட நேரும்
வேலையற்றோர் நாடோடிகள் ஏதிலிகள்
காலம் துரத்தி ஒதுங்கிய அகதிகள்
தஞ்சமடைந்தவர் சின்னக் குழந்தைகள்
கூட்டினுள் பகலில் தூங்கும் கரடியை
புலியைப் சிங்கத்தைக் குதிரையை
வேலியால் எம்பிப் பார்த்துக் களிக்கும்!
வித்தைகள் காட்டி மயக்கிய சேர்க்கஸ§ம்
ஒருநாள் புறப்பட்டுப் பரதேசம்போனது
அறுவடைதீர வயல் தனியானது
ஆரவவாரங்கள் ஆர்ப்பாட்டங்கள்
நீங்கியோய்ந்த மைதானம் நோக்கையில்
மனம் வெளியாகுது சிறுவலி காணுது
ஒரு சூரிய அஸ்த்தமனத்தில் ஆவதைப்போல!
25.11.2004 Berlin
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-03-06