சுகிர்தங்கள் புலரும் கனவு
-காருண்யன்-
இதயம் லயத்துடன் துடிக்க மாத்திரை
சர்க்கரை குருதியில் எகிறாமல் ஊசி
கொழுப்பின் கொன்றோலுக்கு கப்சூல்
கை கால் மூட்டு வலிகளுக்குத் தைலம்
உண்பது ஜீரணமாகவொரு பாயம்
உபரியாம் மூலத்துக்கும் களிம்பு
விடிந்தால் ஹொஸ்டல் பிள்ளையின்
'தாக்குப் பிடிக்கேலாதினி' என்ற கடிதமுமோ
வாடகைப்பாக்கியின் மூன்றாவது நினைவுறுத்தலோ
வீட்டைக் காலிபண்ணச் சொல்லும் கட்டளையோ வரும்
அந்திக்குள் வரும் கடன்காரனுக்கு புதுஆறுதல்
வார்த்தைகள் தேடிக்கொண்டு இனிமேலும்
சுகிர்தங்கள் புலர்வதாங் கனவில்
இன்னமும்
வாழ்ந்திருக்க ஆசை.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-03-20