அக்சய திருதியை
--------------------
நாளெல்லாம் நிகழ்வுகளில்
நல்லதே வேண்டுமென
எல்லோரிடமும் எதிர்பார்ப்பது
புல்லைத் தின்ன சொல்லிப்
புலியை மல்லுக்கட்டுவது போலாகும்.
நல்ல நாட்களில் அதைச்
சொல்ல வரும் போது
நினைவினில் அகலாது
நீங்காமல் நிறைந்திருக்கும்.
தங்க வியாபாரத்திற்காக
தந்திரமாய் அதை மாற்றி
வாங்குங்கள் தங்கத்தை
பெருக்குங்கள் செல்வத்தை - என
உணர்வுகளைச் சாதகமாக்கி
உல்லாசமாய் வியாபாரம் பெருக்கி
மனிதனைச் சிந்திப்பதிலிருந்து
மழுங்கடிக்கச் செய்வதையும்,
கூட்டத்தை வரவழைத்துக்
கொள்ளை லாபம் ஈட்டுவதையும்,
சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
உள்ளத்தில் தூய்மை ஒன்றே
உலகத்தில் சிறக்குமென்பதை
உணர்ந்திட வேண்டும்.
-சித. அருணாசலம்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-05