பயணம்
-----------
அருவிகளின் பயணம்
ஆறாக முடிவதுடன்,
ஊர்களில் வெளிச்சத்திற்கு
உத்தரவாதம் தருகிறது.
ஆறுகளின் பயணம்
அது போகும் பாதைகளில்
தீராத தாகத்தைத் தணித்து
அள்ளித் தருகிறது செழிப்பையும்.
ஆடைகளின் பயணம்,
கடைசி வரை மானத்தைக் காப்பதுடன்,
காட்டிவிடுகிறது
கவர்ந்திழுக்கும் அழகையும்.
பூக்களின் பயணம்
புனிதத்தில் முடிவதுடன்,
மரியாதைக்கு அடையாளமாகும்
மகத்துவத்தையும் தருகிறது.
மரங்களின் பயணமோ
பலனை எதிர்பார்க்காமல்
பார்த்துப் பார்த்துக் கடமையைச் செய்யும்
கீதையின் பாதையில்.
மனிதனின் பயணம் மட்டும் ஏன்
மக்கிப் போய்த் தொடர்கிறது.
மாறாத வடுக்களை
மற்றவர் மனங்களில் பதிப்பதும்,
அடுத்தவர் உணர்ச்சிகளை
அடியோடு மிதிப்பதும்,
பார்க்காத போது வக்கிரத்தைப்
போர்த்திக் கொள்வதும்
வஞ்சனையை மனத்தில் வைத்துக் கொண்டு
நஞ்சினைச் செயல்களில் ஏற்றுவதுமாய்
வழித் தடங்களில் எத்தனை
வாழ்க்கைத் தடங்கல்கள்.
பாழடைந்து விட்ட இந்தப்
பாதையைச் செப்பனிட்டுப்
பயணத்தின் மீதியைப்
பரவசமாக்குவோம்.
-சித. அருணாசலம்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-03