எனக்குள்ளும்.. 15-11-06.
முடிவு வரும், முடிவு வரும்
விடியல் என்றொரு முடிவு வருமென
வெகுவாகக் காத்திருந்து வெகுதூரமாகிறது.
பகுத்தறிவாளன் உயர் எண்ண மனிதன்
வகுத்தே பார்க்கிறான் வக்கரித்த மனங்களாய்.
வெகுவான பின்னோட்டம், சிறிதும் அபிவிருத்தியில்லை.
--
வெட்டிக் கொத்தி வெகுமதி உயிர்களைச்
சுட்டு, குண்டெறிகிறார் மனிதக் குடியிருப்பில்.
அட்டூழியங்களின் சாயல் கற்கால மனிதனாக
எட்ட இருந்து பார்த்தும், ஊடகத்தில்
கேட்டும் அறிகிறோம், விடிவில்லை வேதனையே.
கிட்டும் வெற்றி மனதிற்கும் புலப்படவில்லை.
---
மனம் கலங்குகிறது குண்டு வீழ,
மகிழ்கிறதே தேசியடோராக் கப்பல் மூழ்க!
நிகழ்வது என்ன! எனக்குள்ளும் வன்முறையா!
நிற்கிறானா கற்கால மனிதன் என்னுள்ளும்!
சொற்பதம் இதற்கென்ன! இனஉணர்வா?
சொல்லுங்களேன் எனக்கொன்றும் புரியவில்லை.
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ். டேன்மார்க்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-11-19