பெண் மொழிகள்.
மறைவுறுப்புகள் பெயர் எழுதி, அதில்
நிறையும் உணர்வு, செயற்பாடு எழுதி,
மறைவின்றிப் பச்சை பச்சையாகப் பலர்,
இறைக்கிறார் கவிதைகள், இது விடுதலையாம்.
இலையாடைப் பிறப்பு, நிர்வாண நிலையருக,
தலையெடுப்பு நாகரீகம் பல உயர்படிகளாக.
அலைபுரண்டது மதிப்பு மரியாதையென
வலை விரித்தது நாகரீக உறவாடல்கள்.
---------------------
மனிதம் நாகரீக உச்சம் கண்டதென்று
மடங்கி விழுந்ததோ இன்று தொப்பென்று!
ஆதியில் பேசினோமே பச்சை பச்சையாக,
நீதியில்லையாம் அதை மூடிமறைப்பது!
ஆடையெதற்கு இன்று எமக்கு அங்கத்திலே
ஆதியில் திரிந்தோமே நிர்வாணமாயென்று; ,
வாதிக்கமாட்டாரோ அடுத்த வாரிசுகள்?
போதிக்கும் வழியோ இப் " பெண் மொழிகள். "
------------------------
புல்லை, புவியை, புலர்காலை அழகென்று
சொல்லை உழுத கவியுலகில் " பெண் மொழி "
முல்லை மணம் வீசுமோ! கல்லையாகுமோ!
எல்லையின்றி எங்கு போய் முடியுமோ?
பெண்களின் கவிதையானால் இன்று சிறு
பின்வாங்கல் அதில் மேய்ந்திட, ஐயகோ!
பெண் மொழிகளாற் தலை சுற்றுகிறது.
என்ன இது! கவியுலகம் எங்கே போகிறது!
----------------------------
பா ஆக்கம் - வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-06-05