இன்னுமெந்தன் காதில்..
------------------------------------
இன்னுமெந்தன் காதிலுங்கள் குரல்...
பின்னுகிறது பழமை வேதமாக!
இன்னுமெந்தன் கனவில் உருவம்..
சின்னத்திரை போல் மின்னுகிறது!
இன்னும் நீங்கள் பூவுலகில் தினம்
பின்னும் நினைவில் என்னுடன் தானம்மா!
நீங்கள் இல்லை என்று எதற்காக
நான் இங்கு கலங்க வேண்டும்!
நீங்கள் என்றும் என்னுள் தானம்மா!
நீங்களென்னை விட்டுப் போகவில்லை!
நான் மறந்தாலன்றோ நீங்கள் விலகுவதற்கு!
தேன் நினைவுகளில் நான் தர..தன..னன..னா..
பொறுமையெனும் பெரும் ஆயதம் தந்தீர்கள்!
பண்பெனும் நடைவண்டியிற் பிடித்து
பக்குவமாயன்று நடை பயில வைத்தீர்கள்!
பாரில் நிமிர்ந்துள்ளேன் பெருமையாயின்று!
என் மனிதத்தின் சாவியே நீங்களும்
என் அப்பாவும் தானேயம்மா!
விநாயகராய் உங்களைச் சுற்றினேன்!
விளக்கமிகு வாழ்வுக் கனி ஏந்தியுள்ளேன்!
அன்னையர் தினமென ஒரு நாளாம், நான்
எண்ணுவது அன்றல்ல, என்றுமே தான்!
நன்றிகள் நவில்வது நாளும் தானம்மா!
குன்றிடா வாழ்த்துகள் அகிலத்து அன்னையருக்கு!
-வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-05-15