பிணைந்த சாமர்த்தியம்...
-------------------------------------
சொன்னால் புரியும் மனங்களும்
தன்னாலும் புரியாத மண்டூகங்களும்,
மென்மையான மனங்களோடும் பலர்
வன்மையான மனங்களோடும் சிலர்.
களிமண்ணாக சில மூளைகளும்
காயகல்பமாக சில மூளைகளும்
பளிங்கு போன்ற சிந்தனைகளோடும்
கலங்கிய சிந்தனைகளோடும் சிலர்.
உலக உயர் நிலையில் சிலரும்
அதள பாதாளத்தில் சிலரும், மனிதநேயம் காக்கும் சிலரும்
மனிதநேயம் மிதிக்கும் பலரும்.
நல்லது-தீயது, சிறியது-பெரிதுமாய்
வட்டம்-சதுரம், வளைந்து-நீள்கோடாய்
மொத்தமாய் இவ்வுலக வாழ்வில்
எத்தனை வேறுபாடுகள் மனிதரில்!
ஐந்து வேறுபாடான விரல்கள்
ஐக்கியமாகி இணைந்த கரங்களாவதாய்
இணைந்து வேற்றுமைகளிலும் வாழ்வது
பிணைந்த எம்முள்ளெழும் சாமர்த்தியமே!
4-08-2009
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-08-29