நிலவோடு நீ வருவாய்
- நாவாந்துறை டானியல் ஜீவா-
நீ விழித்திருக்கும் போது
நான் தூங்கிறேன்
நீ தூங்கும் போது
நான் விழித்திருக்கிறேன்.
நீயொரு தேசமாய்
நானொரு தேசமாய்
ஆயினும்
கனவில் கூட
உன்
கண்கள்தான்
ஓ வென்று அழுதாலும்
சீ என்று சினந்தாலும்
மனதில் நிலையாய்
நிற்பது
உன் வார்த்தைகள்
மட்டும்தான் ..!
நீயிருக்கும் போது
என் இதயம்
இடிபோல
சுமைகளும்
சுகமாய் சுமக்கும்
நீயில்லா
என்னிடம்
இளவம் பஞ்சுக்
கனம் போல்
நெஞ்சில்
இறங்கினாலும்
நெருப்பில் விழுந்த
புழுவைப் போல்
நெகிழ்கிறேன் .
தெருவில்
இறங்கினால்
நிலவோடு
நீ வருவாய்
நான்
வேலைக்குச் சென்றால்
என் உடையோடு
நீ ஒட்டிக் கொள்கிறாய்
வீடு திரும்பி
தூங்க
துணைக்கு
நீ வருகிறாய்
என் உடலே
உனக்காக
உருவெடுத்திருக்கின்றது.
என் விழிகள்
விழித்தாலே
உன் நினைவோடு
நீர்த்திவலை
ஆயினும் ..?
கடந்த கால வாழ்க்கை
என்னைப் பக்குவப்படுத்தியதினால்
நான்
எனக்கான
விடுதலையை
வெல்ல வேண்டுமென்றென்....
நீ
உன்னால் அதுவரை
காத்திருக்க முடியாதென்றாய்
நம் நெருக்கம்
நேர்கோட்டில்
நகர மறுக்க
முறிந்தது
நம் உறவு
உன்னைப் பிரிந்தது
துயரமா ?
அது சொல்லி
மாளத் துயரம்
குற்ற உணர்ச்சி
கூனிப்போக
மனசு வலித்தது.
வெகு நாளாய்
தூக்கம் வரல...
நீ பிரிந்த போதே
என் உயிரும்
பிரிந்திருக்க வேண்டும்....
எதற்காக இன்னும்
என் உடலில் உயிர் ..?
.............
பனிப்புலத்து
பட்டமரமொன்று
தனக்குள் தன்னுயூரை
தேக்கி வைத்திருப்பது போல்....
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-07