துடிக்கும் ஆசைகள்!
----------------------------
அக்கறையை கூட
அடக்கமாய்
அறிவிக்கும்
எனக்குக் கிடைத்த
நீயோ
ஆதங்கமாகவே தெரிவிக்கிறாய்
ஆறுதலையும்
தேறுதலையும் கூட!
மின்னிச் சிரித்த
கண்கள்
உப்பு நீர் உகூக்கிறது...,
பிறர்க்காய்!
எழுதிய வார்த்தைகளெல்லாம்
வாடி வதங்கி
வெளுத்துக் கிடக்கின்றன...,
மன கருப்பறையில்!
எனக்கின்றி
குழைந்து வரும் வார்த்தைகள்
இழைத்தெடுக்கின்றன
இன்னொருத்தியாய்....,
உன்னிலிருந்து எனை!
எனதறிவிற்குத் தெரியும்
வேப்பிலையின்
கசப்புத்தான் என்று....,
நீ!
மனத்திற்கு?
வளர்ந்திருந்த எனை
குழந்தையாக்கி
குழந்தையாய் இருந்த நீயோ
குயவனாய்
வநைகிறாய்...,
சில்லுகளை மட்டும்
சேகரிக்கும்
பானையை!
தங்கிவிடுகின்றன
மடித்து கடிதங்கள்
எடுத்துத் தராமலேயே!
காதலின் நிறமேறா
என் வாழ்வில்
பச்சைச் சாயம் ஏற்றி
கருப்பு நிறம்
இறக்கிய பிறகும்....,
தனியறையில்
சந்திக்கும் காதலரின்
இதயத் துடிப்பை விடவும்
ஆயிரம் மடங்கு
அதிகமாய்த்துடிக்கிறது
ஆசைகள்!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-12-10