தாய்மொழி
-----------------
பன்மொழி பயின்ற பாவலர் ஆயினும்
சிந்திக்கும் மொழியோ தித்திக்கும் தாய்மொழி !
உள்ளத்தில் உறைந்திடும் உறங்காத உணர்வுகளை
உலகிற்கு உணர்த்திட உதவிடும் தாய்மொழி!
சிந்தையில் சிறகடிக்கும் சிதறல்களின் சிகரங்களை
சீரோடும் சிறப்போடும் வெளிப்படுத்தும் தாய்மொழி !
எல்லையிலா எண்ணங்களை எழிலுடன் வடித்திட
ஏற்றமிகு எழுதுகோல் என்றென்றும் தாய்மொழி !
இமைதிறந்த நாள்முதல் இதயம்நிற்கும் நேரம்வரை
சுமையிலா அங்கமாய் உடனிருக்கும் தாய்மொழி !!
முகமறியா முகம்கூட உரிமையுடன் உறவாடி
முகவரியை முன்மொழியும் முத்தான தாய்மொழி !
விந்தைமிகு விஞ்ஞானம் விண்ணளவு வளர்ந்தாலும்
வியத்தகு விளைச்சலின் வித்து தாய்மொழி !
மதமாற்றம் இடமாற்றம் எம்மாற்றம் செய்தாலும்
எந்நாளும் மாற்றிட எவராலும் இயலாதது தாய்மொழி !
அலுவல் ஆய்வென்று அயல்நாட்டை அடைந்தாலும்
அவரவரை அடையாளம் காட்டிடும் தாய்மொழி !
சுழலும் பூமிதனில் சுடரொளியாய் திகழ்ந்திட
சுடரேற்றும் திருவிளக்கு நிகரில்லா தாய்மொழி !
யாசிக்கும் உயிர்களில் நேசிக்கும் நெஞ்சங்களின்
சுவாசிக்கும் மூச்சே நாம்பேசுகின்ற தாய்மொழி !
காலம் முடியும்வரை நம்கடமையென காத்திடுவோம்
இயங்கிடும் நம்இதயத்தின் இதயமாம் தாய்மொழி !
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-05-01