நண்பர்கள்
---------------
பிறக்கும் போதே நண்பர்களாய் பிறப்பதில்லை
பிறந்திட்ட எவரும் நண்பர்களாய் இருப்பதில்லை
இறுதிவரை பலரும் நண்பர்களாய் இருந்ததில்லை
உறுதியாய் உள்ளோர் என்றுமே பிரிவதில்லை !
இன்சொல் இன்முகத்தால் ஈர்த்திடும் அன்பர்கள்
இதயத்தால் இணைந்திடும் நாளைய நண்பர்கள் !
பள்ளிப் பருவத்தே துள்ளி விளையாடும்
கள்ளமில்லா உள்ளமுடன் பால்ய நண்பர்கள் !
கல்லூரிக் காலத்தில் கற்பனை கனவுடன்
உல்லாச பறவைகளாய் உலாவரும் நண்பர்கள் !
அலுவல் பணிதன்னில் உளமகிழ உரையாடி
அளவோடு பழகிடும் பகுதிநேர நண்பர்கள் !
பயணிக்கும் நேரத்தில் சயனிக்கும் நேரம்வரை
சிந்தையின் சிதறல்களை பகிர்ந்திடும் நண்பர்கள் !
நலிவுற்ற நேரத்தில் பொலிவுடன் மீண்டிட
உதிரத்தால் உதவிடும் உயிரான நண்பர்கள் !
அகமும் புறமும் இருவேறு உருவங்களாய்
வஞ்சமிகு நெஞ்சுடன் வலம்வரும் நண்பர்கள் !
காரியம் நடந்திடும் காலம்வரை உறவாடி
முடிந்தபின் நட்பினை முறித்திடும்* நண்பர்கள் !
உதவிகள் செய்திட்டால் உறவாடும் உள்ளங்கள்
உதவிஎனக் கேட்டால் உதறிடும் நண்பர்கள்!
புண்பட்ட நெஞ்சினை பண்பட்ட உள்ளத்தால்
ஆற்றிடும் மருந்தாய் அருமைமிகு நண்பர்கள்!
பொன்னும் பொருளும் பணமும் பதவியும்
நம்மிடம் இருந்தால் நாடிடும் நண்பர்கள் !
இல்லாமல் இருந்து இருக்கும்நிலை உயர்ந்திட்டால்
அறியா முகங்களாய் மாறிடும் நண்பர்கள் !
காலம் முடியும்வரை களைந்திடுவோம் பகையுணர்வை
காலன் அழையும்வரை அணிந்திடுவோம் நட்புணர்வை
இன்பம் நிலைத்திட ஒன்றிடுவோம் நண்பர்களாய் !
இதயம் நிற்கும்வரை நின்றிடுவோம் நண்பர்களாய் !
-இரா.பழனி குமார்
சென்னை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-03-28