ஊன்றுகோல்
-------------------
கலையாத கர்ப்பத்தில் நிலைத்திட்ட கருவாக
குறையிலா அங்கமுடன் நிறைமாத பிறப்பாக
உருவான உடலுடன் உலகினில் உயிர்ப்பது
இயல்பாய் நடந்திடும் இயற்கையின் நிக்ழ்வுகள் !
முழுமையாய் இல்லாமல் குறையுடனே பிறந்திட்டோர்
காலத்தின் கோலத்தால் கால்களை இழந்திட்டோர்
நடைபயிலா மழலைபோல் நடமாட முடியாதோர்
விடியாத பகல்போல முடியாத ஓவியங்கள் !
ஊனம் உள்ளதால் உள்ளம் உறைந்திட்டு
இறுகிய நெஞ்சுடன் இன்னலுறும் இதயங்கள்
மாறுபட்டு பிறந்ததால் வேறுபட்ட சமூகமாய்
வாடிய மனதுடன் வாழ்கின்ற மனிதர்கள் !
ஊனமுடன் பிறந்ததால் உடைந்திட்ட உள்ளங்கள்
சுமையிலா வாழ்வை சுகமாய் பெற்றிட
ஈரமுள்ள இதயங்கள் இரக்கமுடன் உதவிட்டால்
மனவலியை மறந்திட்டு மகிழ்வோடு வாழ்ந்திடுவர் !
ஊனமுள்ள உள்ளங்கள் ஊக்கமுடன் செயல்பட
தரமான வாழ்விற்கு தடையின்றி நடைபோட
உள்ளத்தில் உறுதிபெற உவகையுடன் உலவிட
உதவிகள் செய்திடுவோம், ஊன்றுகோலாய் மாறிடுவோம் !
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-05-15