மண்
--------------
மண்ணே!
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
மௌன யுத்தம் செய்தோம்.
வாசிப்பிற்கும் நேசிப்பிற்கும்
இடையில் இருந்தோம்.
அந்த அமைதியையே
எங்களைப் புரிதலுக்கான
மொழிகளாக்கினோம்.
தெளிவான சிந்தை வழி
கரை தேடிப் போனோம்.
அது
எமக்கான
பற்றுதல்களை
ஆத்மார்த்தம் மீதான இழைகளை
அறுக்காது
என்பதும்
உணர்த்தப்பட்டது;
உணரப்பட்டது.
ஆண்டுகள் தம் இயல்புடனே
போகின;
கடமைகள்
பலவாகின.
உனக்கான நேசமும்
அந்நேசத்திற்கான
இருத்தலும்
எப்போதும் என்மனத்தோடும்
தொடர்ந்தே வந்தன.
இன்று
நீ
குதறப்பட்டாய்;
இரத்தம் சிந்தினாய்;
வீழ்ந்து கிடக்கின்றாய்.
செய்திகள் பறக்கின்றன;
மௌனிக்க முடியவில்லை;
கையாலாகாத்தனத்தில்
மனம் இறுகி போகின்றேன்.
மீளவும் உணர்கின்றேன்;
உனக்கான மதிப்பும் விருப்பும்
உயிர்ப்புடனே இன்னும்
என்னுடனே.
கணந்தோறும் கரங்கள்
நீள்கின்றன;
அவை
ஆறுதலுக்கானவை;
பற்றி எழுப்பலுக்கானவை;
மலர்ச்சிக்கானவை.
தேடி மனவெளி பயணப்பட்டேன்;
கொடூரங்களற்ற நிறைவான
அமைதிப் பொழுதொன்றில்
உன்
புன்சிரிப்பின் அர்த்தங்கள் மட்டும்
என்னோடு பேசினால் போதும்.
-கனிகை
- கனிகை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-02-06