செஞ்சோலைக் குஞ்சுகளே!
மனம் நிறைய மலர்கள்
நெஞ்சுருக அஞ்சலிகள்
கண்ணிரண்டும் குளங்கள்
குமுறுகின்ற உணர்வுகள்
யாவும் இருந்தென்ன?
நீங்கள் இன்றில்லை
எம்மிளம் சிட்டுக்களே!
பல்லி சொல்லவில்லை
பூனை போகவில்லை
ஆந்தை அலறவில்லை
ஆட்காட்டியும் சத்தமில்லை
காகம் கூட உணர்த்தவில்லை
யார் நினைத்தார்-பேடிகள்
பிஞ்சுகளைச் சிதைப்பாரென்று
உறுதிமிக்க உறவுகளே-எம்
பட்டாம்பூச்சிக்கனவுகளே
உங்கள் வாழ்வினில்
எத்தனை நினைப்பிருக்கும்
விடுதலைத்துடிப்பிருக்கும்
கல்வித்திறனிருக்கும்
பாசக்கரமிருக்கும்
அத்தனையும் ஒடித்தாரோ?
ஆறுதல் என்பது எமக்குக்
கற்பனையாய் போயிற்று
மீண்டும் மீண்டும் முயல்கின்றோம்
இழப்பின் சோகம்- நெஞ்சில்
குற்றிய முள்ளாய் வலிக்கிறது
மழலைகள் மாதர் வயோதிபர் ஏதிலிகள்
பேணிச்செய்வதே போர்தர்மம்-இதுதானோ
பாதகர் புத்ததர்மம்?
கேவலம் பிள்ளைகளே
உமைக் குதறியது அவர்க்குக்
கேவலம் பிள்ளைகளே
மௌனித்துப் போன ஐரோப்பிய நாடுகளே!
உல்லாசப் பயணிகள் அங்கிருந்தால்
அலறிக் கதைத்திருப்பீர்
ஆதரவற்ற தழிழரென்றே
புறம் தள்ள நினைத்தீரோ?
உமையொத்தே உயிரழிக்கும்
அரசென்று இணை சேர்ந்தீரோ?
கதறித்தான் நிற்கின்றோம்-ஆனால்
சாம்பலிலும் உயிர்க்கின்ற பூக்கள்நாம்
தழுவி வரும் மென்காற்றில்-எம்
அஞ்சலிகள் நிறைந்திருக்கும்
சாந்தியடைக குஞ்சுகளே!
நாட்கள் எப்போதும்- இப்படிக்
கலங்காது.
கனிகை
- கனிகை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-18