ஒரு காரணம் தேவைப்படுகிறதுதான்!
-----------------------------------------
சேட்டுக்கடையில் அடகுவைத்த
செப்புச்சருவம்
கட்டாத வட்டியில் மூழ்கிப்போக
பதிலுக்கு இரண்டாய்
பிளாஸ்டிக் குடங்கள் வாங்கி
சொல்லிக்கொண்டாள்
'தூக்கிச் சுமக்க
இதுதான் நல்ல வசதி..'
கழுத்தில் கிடந்த
பொட்டுத்தங்கத்தை
கஞ்சிக்காய் விற்ற பொழுதும்
மேம்போக்காக சொல்லிக்கொண்டாள்
'இனிமேலாவது இருட்டுல
பதறாம போய்வரலாம்..'
கல்யாணவயதை
கடந்து நிற்கும் மகளை
இரண்டாம் தாரமாய் கேட்டுவர
சரியென்றவள் சாவகாசமாய்
காரணமும் சொன்னாள்
'மாப்பிளைக்கு வயசவிடவும்
அனுபவம் முக்கியந்தான்..'
உள்ளுக்குள் கதறியழும்
மனதுக்கும் ஆறுதல் சொல்ல
தனக்குத்தானே ஒரு காரணமும்
தேவைபடுகிறதுதான்!
-கோகுலன்.
http://ninaivukalil.blogspot.com/
http://gokulansirukathai.blogspot.com/
http://gokulanpoem.blogspot.com/
http://gokulanfotos.blogspot.com/
- கோகுலன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-15