முதலாய்க்.. துளிகளே.. தொலைவின்.. படுக்கை
01.
முதலாய்க் கண்டேன்
-----------------------------
மனிதனும் மனிதன் சார்ந்த
சப்தங்கள் எதுவுமற்ற
ஒரு பின்முற்றத்தின் முன்னிரவில்தான்
முதலாய்க் கண்டேன் அவனை!
காய்ந்து தரைபார்க்கும் இதே
தென்னைமரத்து மட்டையில்தான்
தொங்கிக்கொண்டிருந்தது
அவனது நீண்ட அங்கி
நேற்றைய மழை முற்றத்தில்
மண்புழுக்கள் வரைந்துபோன
கோலத்தை விரல்களால்
வர்ணம்பூசி ரசித்தான் வெகுநேரமாய்
இன்று உதிர்ந்த பூக்களுக்கும்
நாளை மலரும் மொட்டுகளுக்குமாய்
பனைமரத்தின் சரசரக்கும் தாளத்துடன்
கவிதை படித்தான் சிறிதுநேரம்
தூக்கம் தழுவாது
இமைகளைப் போர்த்திக்கொண்டிருந்த
என் கண்களின் மேல்
ஒரு அமைதிப்பொதியை
தூக்கி வைத்திருந்த அவன்,
உயரப்பறந்ததொரு விமானத்தின் சத்தம்
தூரமாய்க்கேட்ட அந்த
முதல் நொடியில் தான்
அந்த நிலவின் பின்னால்
ஓடிச்சென்று ஒளிந்துகொண்டான்
செல்லும் அவசரத்தில் தவற விட்ட
அவன் புன்னகைகள் மாத்திரம்தான்
யகங்களாய் இறைந்துகிடக்கிறது
என் பின்முற்றத்தில்!
02.
துளிகளே தூண்களாய்..
----------------------------
கருகிப்போகும் பயிர்களுக்கும்
உருகிப்போகும் உயிர்களுக்கும்
ஊட்டத்தின் ஆதாரமான மழைத்துளிகள்!
வாழ்வின் உயர்வுக்கும்
உலகின் வளமைக்குமான பாதைகளில்
வழிநடத்தும் உழைப்பின்
வியர்வைத்துளிகள்!
சாலையோரம் முதியோரை
பிச்சையெடுக்கும் சிறுவர்களை காண
கருணையுடன் பொங்கிவரும்
கண்ணீர்த்துளிகள்!
சந்ததிகள் விதைத்திடும்
உயிர்த்துளிகள்..
கவலைகளின் மருந்தாய்
மழலை முத்தத்தின் எச்சில்துளிகள்..
என,
துளிகள்தான் தூண்களாய்
தாங்கிநிற்கின்றன இந்த உலகை!
03.
தொலைவின் அருகாமைகள்
----------------------------------
எங்கோ நகர்ந்துகொண்டிருக்கும்
அதே நிலவு இங்கும்
இந்த குளத்திற்குள்ளேயும் தான்
மழையில் அழும் வான்விழிகளின்
வண்ணவில் புருவங்கள்
ஒவ்வொரு அருவிக்கரையிலும் தான்
யாருமற்ற நள்ளிரவின் நிசப்தம்
ஒவ்வொரு ஆரவாரத்தின்
பிரித்துப்பார்க்கப்படாத மையத்திலும் தான்
எங்கோ என நினைத்திருக்கும்
அந்த முடிவில்லாத ஒன்று
தனித்த நமக்குள்ளும் தான்.
தொடுவானத்தின் அக்கரையில்
கையில் விளக்குடன்
காத்துக்கொண்டிருக்கும் நீயே,
என்னினும் நெருக்கமாய் அமர்ந்துகொண்டு
எனக்குச் சொல்கிறாய்..
"தொலைவின் அத்தனையும்
அருகாமையிலும் சாத்தியம்தான்!"
04.
படுக்கை சிலுவையில்..
----------------------------
வீசத்தொடங்கிவிட்ட
அதிகாலை வெளிச்சத்தென்றலில்
மெள்ள அசைந்தாடுகின்றன
சாரளத்தின் கண்ணாடி சீலைகள்
கொல்லைப்புற வேலியின்
குருவிகளின் இசையருவியில்
சில்லிடுகிறது செவிப்பறை
கடலின் நுரைகளை நாற்புறமும்
கரை சேர்க்கும் அலைகளாய்
மொட்டவிழும் மல்லிகையின்
மணத்தை திசைகளில் பன்னீராய்
தெளிக்கிறது குளிர்காற்று
நள்ளிரவில் வீடுதிரும்பும்
பனித்துளி கணவனுக்கு
பிரியத்துடன் விடைகொடுக்கும்
பசும்புல் பத்தினிகள்..
எழுந்து ரசிக்க விரும்பாத
எத்தனையோ இதயங்களை
மேலும் சில இரும்பாணிகள் கொண்டு
படுக்கை சிலுவையில் அறைகிறது
சோம்பல்!
--
நேசம் நிறைந்த நட்புடன்,
கோகுலன்.
http://ninaivukalil.blogspot.com/
http://gokulansirukathai.blogspot.com/
http://gokulanpoem.blogspot.com/
http://gokulanfotos.blogspot.com/
- கோகுலன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-05