பயமாகவேயிருக்கிறது எனக்கு
----------------------------------------------
நீயின்றி என்னால் வாழமுடியுமாவென
பயமாகவேயிருக்கிறது
நமது சமீபத்திய நெருக்கத்தில்...
துருவங்களின் கடைசி அணு வரையிலுமான
உலகின் அனைத்தையும் ஒளிபொருந்திய
உன் முகத்தில் காண்கிறேன் நான்!
என் மகிழ்ச்சிக்கும் ஊக்கத்திற்குமான
விமர்சனங்களை உன் முகவரிகள்
தினமும் தாங்கியபடியிருக்க,
தூங்கும் நேரத்தினும் அதிகப்படியாய்
உன் முகத்தையே மொய்த்துக்கிடக்கின்றன
என் கண்கள்!
உன் மடியிலும் மார்பிலும்
ஊர்ந்துகொண்டிருப்பதிலேயே சுகம்கண்ட
என் விரல்நுனிகளுக்கு நீ ரேகைகளின் வழியே
புத்துயிர் பாய்ச்சுவதையும் என்னால்
மறுக்கமுடியாதுதான்
விரல்களின் இயக்கத்தினூடே
தூக்கம் வென்றுவிடும் நள்ளிரவிலும்
நான் தூங்கியபின் சற்றுநேரம் விழித்திருந்தே
நீ தூங்கிப்போவாய் என்பதையும் அறியும் நான்
அதே எண்ணங்களின் மிச்சங்களோடே
அதிகாலை முகம் கழுவும் முன்னரே
உன்னை உசுப்பவும் தயாராகிறேன்
என் படுக்கையின் மேல்
தலையணையின் இருப்பைவிடவும்
என் படுக்கையிலும் உனது இருப்புதான்
முக்கியமாய்ப்போகிறது
இப்போதைய இரவுகளில்!
மார்பின்மீதும் மடியின்மீதும்
உன் வெப்பம் இதமாகவே இருந்தாலும்
உன் சமீபத்திய நெருக்கம் குறித்து
கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது,
என் மடிக்கணினியே!
-கோகுலன்
(டிக்கணினி = லேப்டாப்)
----------------------------------
http://ninaivukalil.blogspot.com/
http://gokulansirukathai.blogspot.com/
http://gokulanpoem.blogspot.com/
http://gokulanfotos.blogspot.com/
- கோகுலன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-11