அர்த்தமுள்ள கர்வம்
என் விடுதி நண்பர்களே!
நான் ஒரு பட்டிக்காட்டான் என்று
பரிகாசம் செய்பவர்களே..
எனக்கு கொஞ்சம் கர்வம்தான்
நான் ஒரு விவசாயி மகன் என்பதில்
எனக்கு கொஞ்சம் கர்வம்தான்.
++++++++++++++++++++
உங்கள் தந்தைகளோ
வாரம் இரண்டுநாள் தவறாமல்
செல்வார்கள்
கோவிலுக்கும்,மருத்துவமனைக்கும்..
என் தந்தையோ
மழைக்கு கூட ஒதுங்கியதில்லை
பள்ளிக்கூடத்திற்கும்,மருத்துவமனைக்கும்..
+++++++++++++++++++++
கணிப்பொறியை கையில்
வைத்திருக்கும் உங்கள் தந்தையைவிட
கலப்பையை கையில்
வைத்திருக்கும் என் தந்தைக்கு
சிவப்பாகவே இருக்கும்..
உள்ளங்கை..
++++++++++++++++++++++
உங்களுக்கு ஒன்று தெரியுமா?
மனிதன் தனக்கான உணவை
தானே தயாரித்துக் கொண்டபோதுதான்
நாகரிகம் பிறந்ததாம்.
அப்படி பார்த்தால்
இங்கே நான் மட்டும்தான்
நாகரிக மனிதனின்
ஒரே வாரிசு.
+++++++++++++++++++++++
வாகனத்தில் அமர்ந்து
நகரத்தை சுற்றிப்பார்த்த
நீங்கள் எங்கே புரிந்து கொள்ள்ப்போகிறீர்?
தந்தையின் சிம்மாசன தோளில் அமர்ந்து
உலகத்தையே அரசாண்ட
இந்த மன்னனின்
கர்வத்தை..
+++++++++++++++++++++++
என் விடுதி நண்பர்களே!
நான் ஒரு பட்டிக்காட்டான் என்று
பரிகாசம் செய்பவர்களே..
எனக்கு கொஞ்சம் கர்வம்தான்
நான் ஒரு விவசாயி மகன் என்பதில்
எனக்கு கொஞ்சம் கர்வம்தான்.
-- இ.அருண்மொழிதேவன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-20