மழையை சுமந்துச் செல்லும்
மேகங்களே!
என் மனதையும் கொஞ்சம்
சுமந்துச் செல்லுங்கள்..
தென்திசை நோக்கித்தானே
உம் பயணம்!
அங்குதான் இருக்கிறது
என் கிராமமும், இதயமும்..
--------------------
சென்ற வாரம்
கன்று ஈன்றதாம் எங்கள் லட்சுமி.
அதனிடம் போய் சொல்லுங்கள்
"அந்த சின்ன கன்றுக்காக
கொஞ்சம் காம்புகளை
இறுக்கிக்கொள்" என்று.
பாவி பசு!
என்னை விட
என் குடும்பத்தின்மீது
அதிக பாசம் அதற்கு.
ஒரே நேரத்தில்
ஒட்டுமொத்த ரத்தத்தையிம்
பாலாக தரச்சொன்னால் கூட
தந்துவிடும்.
-------------------
என் வீட்டுக்கு அருகில்
எங்காவது வெள்ளை நிறத்தில்
ஒரு சேவல் தென்பட்டால்
தயங்காமல் அதனிடம் சொல்லுங்கள்.
நான் உறங்கச் சொன்னதாய்..
பாவம்!ஊரில் இருந்தவரை
நான் படிக்கவேண்டும்
என்பதற்காக
நான்கு மனிக்கே
எழுந்து கூவும்..
--------------------------
எங்கள் தெருவுக்கு
பக்கத்து தெருவில்
விளையாடி கொன்டிருக்கும்
என் நண்பன் வீட்டு நாய்.
அதனிடம் போய்ச் சொல்லுங்கள்
"நான் அடுத்த வாரம்
ஊருக்கு வருகிறேன்" என்று..
என் நண்பனின் வீட்டுக்கு
நான் செல்லும்போதெல்லாம்
என் நண்பனுக்கு முன்னரே
வாசல் வரை
வந்து வரவேற்கும்
அந்த நாய் கண்டிப்பாக
மகிழ்ச்சியடையிம்.
--------------------------
ஊரை விட்டு வெளியே
கொஞ்ச தூரம்
நடந்துச் சென்றால்
ஒரு மேல்நிலைப் பள்ளி வரும்
மறக்காமல் அதனிடம்
நான் சொன்னதாய்
ஒரு வணக்கம் சொல்லுங்கள்.
என்னை யாரென்று கேட்கும்.
பரவாயில்லை!
நீங்கள் வந்துவிடுங்கள்.
ஏனெனில்
"வாங்கியவன்தான் மறக்ககூடாதே தவிர
கொடுத்தவன் அல்ல"
-----------------------------
"ஏன் மனிதர்களிடம்
சொல்ல உன்னிடம் ஏதும்
சேதி இல்லையா"?என்று நீ
கேட்பது என் காதில் விழுகிறது.
மனிதர்களுடன் பேச
அறிவியல் உள்ளது.
மனதில் உள்ள இந்த ஜீவன்களோடு பேச?..
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-10