உறுமியும் சலங்கையும்
ஒரு கணம் ஒடுங்க,
வியர்த்த முதுகில் "பளீரெ"ன
சாட்டையைச் செலுத்துபவனை
வியந்து பார்த்து வீடியோ எடுப்பான்
வெள்ளைக்காரன்.
அவனுடன் இருந்தவளின்
அபரிமித அளவுகளை
வெறித்துப் பார்த்திருக்கும்
வேலையற்ற கூட்டமொன்று..
இவற்றினூடே,
உறுமிமேளக்காரியின்
ஒடுங்கிய முலைஉறிஞ்சி
உறங்கும் குழந்தை
வாய்கோணிச் சிரித்து
அடங்கும் கை பதறி...
கனவில்
தனது நாளைய சாட்டையைச்
சொடுக்கியதென.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-07