கடந்தநிகழ்வுகள், எதிர்பார்ப்புகள் என சிந்தனை நிகழ்வின் வழியே செல்கிறதோ? இறந்தகாலமும், எதிர்காலமுமற்ற ஒரு நொடியில் நம் பயணத்தை உணர்வதென்பது எத்தகைய அனுபவம்..? ஒரு பயணத்தின் சாட்சியாக இருப்பது ஈரமாக்கிய நினைவுகளேயன்றோ? என்ன பயணம் வாழ்க்கை..ஞாபகங்களன்றி.?
ஞாபக மழை
காலங்கள் கரைந்து
சகதியாய்க் கிடந்த
ஏதோவொரு வெளியில்
மிதந்து வந்த நீலப்பேருந்தில்
என்னை நான் ஏற்றிக்கொண்டதாய்
இப்பயணம் தொடங்கியது...
ஞாபகத்தில் சாரலினூடே
உணர்வுகள் இணைந்து
சுழித்துச் சுழித்தோட
கவனமின்றி சக்கரம் பதித்துச்
செல்லும் இப்பேருந்தின்
பல சன்னல்களில்
கண்ணாடிகள்
நொறுக்கப் பட்டுவிட்டன.
சில, சாலைகளின்
அதிர்வுகளுக்குச் சற்றும்
சம்பந்தமில்லாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன.
எத்தனை முறை
மூடினாலும் திறந்துகொள்வதென்பது
அவற்றுக்குச் சாத்தியமாயிருக்கிறது.
பல இருக்கைகள் மாறியமர்ந்தபின்
எனது இப்போதைய இருக்கையினருகே
சன்னலை சரியாக மூடிவிட்டேன்
மழைத்துளிகள் என் தோள்களை
இனி நனைக்காவண்ணம்.
முன்வரிசையில் திடீரெனத்
திறந்துகொண்ட சன்னலில்
தெறித்த மழைத்துளி
தூவானமாய் என்
மூக்குக்கண்ணாடியில்
புகையடித்து, கன்னங்களில் சிலீரிடுகிறது.
முழுதாய் நனைக்கும்
பெருமழையை விட
இத்தூவானம்
மிகமோசம்.
தொடங்கிய இடத்திலோ
அல்லது வெகுதொலைவிலோ
வட்டத்தின் அடுத்த இரு புள்ளிகளைப்போல
அருகிய வெகுதூரத்தில்
இறக்கிவிட்டுக்கொண்டேன்
ஓட்டுனரும் போய்ச்சேர
ஒடும் பேருந்தும் போய்ச்சேர
உள்ளிருப்பவனும் போய்ச்சேர....
யார் போய்ச்சேருவதற்கென
யாரை யார் ஓட்டுகிறார்கள்?
மீண்டும் ஒரு ஞாபக மாரிக்காலத்தில்
என் பயணம் தொடரும்.
காத்திருப்பேன்,
சாரலில் நனைந்து கனத்தவாறு,
சன்னல்களின் கண்ணாடிகள்
நொறுங்கிய நீலப்பேருந்துக்காய்
அன்றும்..
- ஸ்ரீமங்கை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-04-30