கொடை
"இந்தவருசம் வயல் நிறஞ்ச விளைச்சல்.
ஆத்தா கண்ணு திறந்துட்டா.
கொடையன்னிக்கு எல்லாருக்கும் அரிசிச்சோறு போடுவம்"
தெற்குக்கரை திமிலோகப்பட்டது.
பச்சை செல்லோஃபேன் பேப்பர் சுற்றி
குழல்விளக்குகளின் ஊர்வலம் போக,
அடிக்கவரும் ஆரஞ்சுநிறத்தில் பேண்ட்
போட்ட விடலைப்பசங்களும்,
ரோசாப்பூ நிறத்து ரிப்பன் காட்டும்
சிறுபெண்களுமாய் தெற்குக்கரை
விழாக்கோலம் பூண்டது.
அம்மன் தேரு குளக்கரை மண்டபம் சுற்றி
வந்ததும், தலையாரிக்குப் பரிவட்டம்,அதுக்கப்புறம்
ஆடு வெட்டு, கறிச்சோறு...
நாவில் நீருறியது பலருக்கு.
"ஏலே,வடக்கத்தியான் பலியாட்டை
வெட்டிடாண்டா"
பொறியாய்ப்பரவிய வதந்தி
பெருந்தீயாய் மாறுமுன்னே
தேருக்குப்பின்னால் மறைத்திருந்த
வெட்டரிவாள்களும், சைக்கிள் செயின்களும்
உருவப்பட்டன.
வடக்கும் தெற்கும் மாறிமாறி
கரையில் அடித்துக்கொண்டதில்
கிழக்கும் மேற்குமாய் கம்மாயில்
குருதிவெள்ளம்.
கலெக்டர் வந்தார்.
துப்பாக்கிச்சூடு..ஊரடங்கு உத்தரவு..
பத்துபேர் மரணம். பதினைந்து படுகாயம்-
தினத்தினவின் முதல்பக்கம்...
பலத்தகாவலுடன் இழுத்து வர
தேர் நிலைக்கு வந்தது.
ஊர் நிலைக்கு வர ஒருவாரம் பிடித்தது.
காயங்கள் ஆறி,தலையாரிகள் கலெக்டர்முன்பு
கை குலுக்கினார்கள்.
போட்டோகூடப் பிடித்தார்கள்.
குளக்கரை மண்டபத்தில்
உய்யாங்கிழவன் ஆயாசமாகக் கால்நீட்டினான்
"இந்தவருசமும் கொடையன்னிக்கு பட்டினிதான்"
குளக்கரையில்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-07