திரும்பிப் போகும் அணில்
இன்று அவளுக்கு
அணில் மேல் கோபம்!
மாடியின் ஜன்னல் மூடாத
என் மேல் கோபம்!
கொஞ்சம் இடம் கொடுத்தாலும்
குளியலறையில்
பஞ்சு நார் எனக் குவித்துக்
கூடு கட்டும்!
சுத்தம் செய்ய முதுகு ஒடிகிறதாம்.
எனக்கோ-
ராமர் கோட்டு முதுகை வருடிட ஆசை!
கற்பனையாய்
வாலில் முத்தமும் உண்டு!
அவ்வப்பொழுது
கண்ணாமூச்௪¢ காட்டி ஓடிவிடும் அதற்கு
இன்று ஜன்னல் திறக்காது!
அரைகுறைக் கூடு கலைந்திருக்கும்
என உள்ளுணர்ந்த துயரத்தில்
தோட்டத்தில் அது சுற்றிடுமா?
குறுகுறுக்கும் மனத்துடன்
மூடிய ஜன்னலின் உட்புறம் நான்.
- சிதம்பரம் நித்யபாரதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-13