என் அம்மா
அவளுக்கு நன்றகவே தெரியும்
மகாபாரதமும் இராமாயணமும்-
தினமும் எங்களுக்கு ஏதாவது ஒரு கதை
சொல்லுவாள் அவற்றிலிருந்து
தினமும் ஒரு புதிய கதை உண்டு-
அவற்றில் ஆயிரக்கணக்கில்
கதைகள் உண்டல்லவா?
எப்போதும் அவளுக்கு அவைதான்...
படித்துக்கொண்டிருப்பாள்-
பிரார்த்தனையின் போதும் அவைதான்
சில பகுதிகள சில காண்டங்களிலிருந்து நிதமும்-
ஒரு மண்டலம் ஒரு குறிப்பிட்ட பலனைத்தருமென்று..
நாங்களெல்லாம் பிரஸாதத்திற்கெனவே காத்திருப்போம்
அதுவுமல்லவா என்ன எப்படிச் செய்ய
என்று சொல்லப்பட்டுள்ளது...
சீதை மற்றும் இலவகுசர்களின் கட்டங்கள்
அவளுக்குத் தெரிந்திருந்தும்,
அவற்றைச் சொல்லும் போது
கண்ணில் நீர் வந்தபோதும்-
இராமனின் மேல்,
சீதையின் மேல் சந்தேகித்து
அக்னிப்பிரவேசம் செய்யவைத்த
இராமனின் மேல்
அவளுக்கு கோபம் வந்ததாக
எங்களுக்குத் தெரிந்ததில்லை-
அந்த வயதில்
நாங்கள் கேட்டதுமில்லை
அது அவளுக்கும் பிடித்திருக்குமாவென்றும்
எங்களுக்குத தெரியாது..
எங்களுக்குத தெரிந்ததெல்லாம்
அது பற்றிப் பெரியதாக விவாதித்தவர்களை
அவளுக்குப் பிடித்ததில்லை என்பதே-
அது,
ஒருமாதிரியான,
பிணம்தின்னிக்கொள்ளிகளைப் பற்றி
நினைக்கையில் வருமே
அதுபோன்றவொரு
அருவருப்பு....
நான் வயதுக்கு வந்தபின்னர்
ஒரு நாள்
அம்மா சொன்னாள்..
ஏ அது அப்படித்தான்
பாஞ்ஞாலியை வைத்து
விளையாடியது
இதே கணக்கு தானே?
மற்றதெல்லாம் வெறும் கண்ணாமூச்சி
குழந்தைக்கு நிலா காட்டுவது-
ஒவ்வொரு அம்மாவும்
ஆங்கிலத்தில் சொல்வது போல
சர்ரகேட் மதர் ஒன்லி
(surrogate mother only)
அவளது கர்ப்பப்பை வாடகை ஊர்தி மட்டுமே
வரும் கிராக்கி
அவளது கணவனேயானாலும்-ஏ
சரி,
புரியவேயில்லை....
ஆனாலும்
மகாபாரதமும் இராமாயணமும்
ஏன் கடைசிவரை
படித்துக்கொண்டேயிருந்தாளென்று
- A. தியாகராஜன்.
-------------------------------
A.Thiagarajan
A-504 Dosti Aster
Wadala East
Mumbai 400 037
(thiag@vsnl.com)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-01