உலகமே இப்போது மட்டும் ஏன் நீ..?
உலக நாடுகளின் தலைநகரங்களில்
உரிமையோடு குரல் தந்தோம்
அரங்கங்கள், சதுக்கங்கள், அனைத்திலும்
நிறைந்து நின்று நியாயம் கேட்டோம்
தமிழன் உயிர் வதைபடும் போதெல்லாம்
ஊமையாய் நீ கிடந்தாய்
இப்போது மட்டும் நீ ஏன் உளறுகிறாய் ?
வாயில்லாப் பிராணிகளுக்கு
இரங்குகின்ற உலகமே !
நாம் வானதிரக் கத்தினோமே
காதடைத்துக் கிடந்தாயே !
இப்போது மட்டும் நீ ஏன் உளறுகிறாய் ?
புங்குடுதீவு, அல்லைப்பிட்டி, வங்காலை.
தொடர்ந்த வேளையிலே
மூச்சடைத்துக் கிடந்தாயே !
செம்மணி, கைதடி.. என
தொடர்கிறது புதைகுழிகள்
மனிதம் பற்றிப் பேசுபவரே நீர்
ஊமையாய் போனீரோ?
பச்சிளம் பிஞ்சுகளும், பாலறா வாயர்களும்
பிச்செறியப்படுகையிலே எமக்காய்
குரல் காட்ட மறந்தவர் இங்கே
குருடாகிப் போனீரோ ?
குருடராய், செவிடராய்
ஊமையாய், முடமாய் கொஞ்சம்
இப்படியே இருந்து விடுங்கள்
ஐம்பத்தெட்டில் விதைத்த வினையின்
அறுவடை தொடங்கிவிட்டது
வலியை எமக்குத் தந்தவர்க்கே அது
பரிசாய் கிடைக்கப்போகிறது
நாங்கள் துடித்த போதெல்லாம்
பார்த்திருந்தவர்களே - இன்னும்
கொஞ்சம் அமைதியாய் இருங்கள்
அவர்களும் வலியைக் கொஞ்சம்
உணரட்டும்
இனி வருவது அறுவடைக் காலம்
- கனடாவிலிருந்து இளவரசன் -
- இளவரசன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-06-26