அது ஒரு கனாக்காலம்
வாலிப வசந்தம் - மனித
வாழ்க்கையின் சுகந்தம்.
வர்ணக் கனவுகளின் கலவையில்
சுதந்திர வானில் சிறகடிக்கும் இனிமை.
எல்லாமே இன்று ஒரு கனாக்காலம்
கண்ணெதிரே கலைந்து கொண்டது.
சொர்க்கத்தில் தலைவாசல்
என்னும் ஒரு தீவின் பிரசைகளாய்
முன்னொரு காலமதில்
மகிழ்ந்திருந்த வேளைதனில்
ஆட்சியாளர்களின் பதவிப் போட்டியிலும்
ஆதிக்க வெறியின் உச்சக் கட்டத்தாலும்
திசைக் கொன்றாய் பிரிந்து போனோம்.
இளமைத் துடிப்பும்
உதிரத்தின் புத்துணர்வும்
வருங்காலமதின் அற்புதக் கனவும்
கண்ணெதிரே கலைந்து போனது.
வாலிபத் துடிப்பில்
கன்னியர் பின் காற்தடம் பதித்து
பூரிப்போடு நடந்த நாட்களை
இன்னுமே எண்ணியபடி
துடிக்கிறது பேதை மனது.
நல்லைக் கந்தனின் திருவிழாவும்
புனித அந்தோனியாரின் பெருநாளும்
ஹச்சுப் பெருநாளதனில் நண்பர் வீட்டில்
“வட்டிலப்பம்” உண்டு களித்த
நாட்களை நினைந்தபடி இன்னும்
அழகிய நிலா நாளில்
கோட்டை முனியப்பர் முன்றலில்
வறுத்தெடுத்த நிலக்கடலை
கொறித்தபடி திரிந்த நாட்கள்.
பனி படந்த தேசமதில்
ஓடுகின்ற கடிகார வேகத்திலும்
விரைவாய் ஓடுகின்ற எமக்கு
அது ஒரு கனாக்காலம்
மீண்டும் அந்த நாட்களை
எண்ணியும் முடியாதபடி
முதுமையின் தாக்கம்.
மீண்டும் ஒரு பிறவி என்பதில்
உடன்பாடு எனக்கில்லை
ஆனாலும் அந்தக் காலத்திற்காய்
ஏங்கியபடி இந்த மனிதம்..
இளவரசன் (கனடா)
- இளவரசன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-03-27