சில காதல் கவிதைகள்
- மு.கந்தசாமி நாகராஜன்
கவிதை சொல்லி அழைக்கிறேன் - காதலியே என்
கனவில் உன்னை நினைக்கிறேன்
எதையோ சொல்லத் துடிக்கிறேன் - உன் நினைவில்
என்னை நானே மறக்கிறேன்
கனவுக்குள் நீவந்து போனாய் - என்
கவிதைக்குக் கருவாக ஆனாய்
தொடராதோ நம்காதல் மண்ணில்
தொலையட்டும் அக்கடவுள் விண்ணில்
ஊர்கூடும் நாள்பார்த்து வா
உன்னை நான்சேர நாள் பார்க்கவா?
கனவில் என் கைபிடிக்க வா
கடலமுதத்தைக் கன்னிக்குத் தரவா?
சிலையென்று வியந்த நாளொன்று உண்டு- நீ
சிவனுக்கு சமமென்று நான் நினைத்ததுண்டு
அழிக்கின்ற அழகொன்றை நீ கொண்டதுண்டு-என்
அழுகையை துடைக்க நின் இருகரங்களுண்டு
கவிதைக்குப் பேர்சொல்லித் தாயேன் - என்
கனவுக்கு அர்த்தத்தைத் தாயேன்
கன்னத்தில் முத்தத்தைத் தாயேன் - என்
கவலைக்கு மருந்தாக வாயேன்
நிலவோடு உனக்கென்ன சொந்தம் - இந்
நிலவுலகில் நீடிக்கும் நம்காதல் பந்தம்
என்னோடு இணைய இன்னும் ஏன்மந்தம்? சொல்
எனக்கில்லை இவ்வுலகில் நீயன்றி சொந்தம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-03