என்ன சொல்ல நினைத்தாய் ?
-- சக்தி சக்திதாசன்
அதோ அந்த வானமெனும் வீதியிலே
நிலவெனும் தேரேறி
வலம் வருவோமென்று சொல்ல வந்தாயா ?
முத்துக்களை அள்ளி எடுத்து
ஒன்றாகக் கைகளில் சேர்த்து
தரையினில் சிந்தும்போது
எழும் ஒலியைப் போல நீ சிரிக்கும்
சிங்கார ஒலியின் இனிமையில்
எனை மறக்கச் சொல்ல நினைத்தாயா ?
தென்றல் என்னுடலைத் தீண்டும் போது
சிலிர்த்திடும் மென்மையான உணர்வுகளில்
உன் உள்ளம் கலந்திருக்கிறது
என்றே சொல்ல வந்தாயா ?
சின்னக்குழந்தை பேசும் மழலையில்
தவழும் தமிழின் இனிமையின் வருடல் போன்று
வெண்கலக்குரலில் நீ இசைக்கும்
தமிழிசையை ரசித்திடச்
சொல்ல நினைத்தாயா ?
பாலுடன் கலந்த வெண்மையை
பிரிக்க முடியாததைப் போல்
உன்னுடன் கலந்த என்னிதயத்தை
பிரித்தெடுக்க முடியாது என்றேதான்
சொல்ல வந்தாயோ ?
சொல்ல வந்ததைச்
சொல்லி முடிக்கமுன் அந்தக்
காலத்தேவனுக்கென்னடி அவசரம்
உன்னைக் காற்றோடு
கொண்டு செல்வதற்கு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-01-23