இதயம் பேசட்டுமே !
-- சத்தி சக்திதாசன்
இன்றுவரை அமைதி காத்துக்
கண்டதென்ன
இதயம் பேசட்டுமே !
அன்னையவள் கைகளிலே
தவழ்ந்தபோது
அமைதியைக் கண்டதவள்
கண்களிலே
தந்தையின் பின்னோடு
சென்றபோது
பாதுகாப்புக் கண்டது
அவர் நிழல்தனிலே
இதயம் பேசட்டுமே
இல்லாததையா பேசிவிடும் ?
இன்று மட்டும் பேசட்டுமே !
நண்பனுடன்
நாளெல்லாம் அலைந்தபோது
பாசத்தைக் கண்டதும்
பாசியாய்ப் படிந்ததுமே !
கல்லூரி நாட்களில்
கற்காத சாத்திரங்கள்
கனவுதான் மிஞ்சியது
கண்களிலே !
கன்னியவள் மனதினிலே
ஊஞ்சலாட்டம்
காதலென்னும் கற்பனைத்
தேரோட்டம் !
கடல் கடந்த பயணங்கள்
கலைந்தோடும் மேகங்கள்
கானல் நீரை நோக்கிப்
படகோடு யாத்திரை !
இதயம் பேசட்டுமே
இயங்கும் வரை
இனியும் ஏன் மௌனம் !
இயல்பான வாழ்க்கையில்
இணைந்து கொண்டதும்
இனிமைகள் சில
இழைந்து கொண்டதும்
இன்னமும் நெஞ்சில் தென்றலாய் !
குடும்பம் எனும் கோவிலில்
குலவிளக்காய் குணவிளக்கு
குழந்தை எனும் செல்வமாய்
குழைந்து வந்த குளிர் மேகம்
இன்பம் பாதி இங்கே
துன்பமும் பாதி கண்டேன்
இதயத்தை பேச விட்டு
இறுக்கம் கொஞ்சம்
இழந்து விட்டேன் !
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-11-16