என் தோட்டத்தில் நீ!
===============
- வேதா மஹாலஷ்மி
நின்றதும் நடந்ததும்
இருந்ததும் கிடந்ததுமாய்
என் தோட்டத்தில் எல்லாமே நீதான்...
பச்சை இலையின் இடுக்கெல்லாம்
பாசி படர்ந்த கொடிக்காம்பு - உன்
இச்சை திறக்கும் இடுக்கெல்லாம்
உஷ்ணம் கலக்கும் நரம்பைப்போல்....
மிச்சம் வைத்த பூவையெல்லாம்
உச்சியில் உதிர்க்கும் பூங்கொன்றை,
இடம்பார்த்து, விதம் பார்த்து..
குணம் பார்த்து, மனம் பார்த்து - நீ
சிரித்து வைக்கும் சிரிப்பைப் போல்.....
மழை முடிந்த மரக்கிளை..
வியர்வை பூக்க விறுவிறுக்க,
என்னைப் பார்த்து,
ஒரு பக்கமாய் காலை
ஊன்றி நிற்கும் உன்னைப் போல்....
என் தோட்டத்தில்
இப்படி எல்லாமே நீதான்...
நின்ற இடம் இன்னும்
நிச்சயமாய் அதே வாசம்...
நடந்த இடம் கொஞ்சம்
வேதனையை வழித்தெடுக்கும்...
இருந்த இடம் கண்ணில்
பத்திரமாய் ஒளி வீசும்...
கிடந்த இடம் ,
உயிரில் பாதி துளைத்தெடுக்கும்!!
நின்றதும் நடந்ததும்
இருந்ததும் கிடந்ததுமாய்
இங்கு எல்லாமே நீயேதான்...
மனதில் நின்றதும் மாலை நடந்ததும்
அருகில் இருந்ததும் உயிராய் கிடந்ததும்...
துளைத்ததும் முளைத்ததும்
பூத்ததும் பூக்க வைத்ததுமாய்...
என் உலகில்
இன்று எல்லாமே நீயே தான்!!
----veda
piraati@hotmail.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-08-14