தொண்டு செய்தால்
-------------------
அன்பே மலிய அனைவர்க்குந் தொண்டுசெயின்
இன்பம் மலியுமென்ற பாவேந்தர் சொற்களையென்
சிந்தனை மத்தால் சிலுப்பிய போதினில்
வந்துதித்த எண்ணமதை வாகாய் இயம்புகிறேன். (வந்து)
வாடிய நெற்பயிரை கண்டதுமே வாடியவர்
தேடிய தென்றும் உயிர்தழைக்குந் தொண்டதுவே!
நாடது போற்றும் விவேகா நந்தரும்
நாடிய துண்டோ புகழை பொருளை? (நாடிய)
இறைமை யெனுங்கரு தாண்டி மனிதம்
பரப்பிய வாரியார் தீர்த்தர் ரமணர்;
மறைமலை போன்றே செழுந்தமிழ் மேன்மை
உரைத்தத் தமிழர் நிலையின்று தாழ்வோ? (உரைத்த)
மதத்தின் தலைமை பொறுப்பென்றும் பீடத்தில்
பதமா யமர்ந்தே புகழ்தேட லில்லை;
மதத்தின் வழியினில் மக்களின் தொண்டாம்!
அதைமறக்க வீழ்வா ரழிந்து! (அதை)
----------------
வாடிய நெற்பயிர் கண்டு வாடியவர் = இராமலிங்க வள்ளல்
வாரியார் = கிருபாநந்த வாரியார்
தீர்த்தர் = இராம தீர்த்தர்
ரமணர் = இரமண மகரிஷி
மறைமலை = மறைமலையடிகள்
அன்பு மலிய உயிர்களுக்கு தொண்டு செய்தால் இன்பம் மலியும் என்ற வரிகள்
பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள்
--------------------------
அன்புடன் இராஜ. தியாகராஜன்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-08-14