அவை வணக்கம் (கட்டளைக் கலித்துறை)
நெகிழ்ந்தே எமதரும் கன்னற் றமிழால் நிறைஞரவர்;
இகம்புகழ் பாக்களைப் பாட மகிழும் *அருளரசன்;
தகவான சிந்தனைப் பூவதால் பாமாலை தந்திடுவேன்;
அகமகிழ்ந் தேற்றிட வேண்டுமிவ் வன்பி னரங்கினிலே!
கனவு காணுங்கள் (கொச்சகக் கலிப்பா)
-----------------------------
நாற்றிசையும் ஆள்கின்ற நம்பரிதிச் செம்படராய்
மேற்றிசையில் வீழ்ந்தாலும் வெம்பிழம்பாய் நானிலத்தில்
சீர்த்தியொளி பாய்ச்சிநலஞ் சேர்த்திடவேக் கீழ்த்திசையில்
ஆற்றலொடு மீண்டெழுமே அம்புவிக்குக் காவலென!
சிற்றலையாய் மாமலையில் தோன்றுகின்ற சிற்றாறோ
மற்றெதையும் தன்மனதில் வாங்கிடவே எண்ணாமல்
சுற்றிநிலங் காடுமலை வழ்ந்திருக்கும் பேராழி
பற்றிடத்தான் ஓடுவதைப் பார்த்திருப்பாய் என்தோழா!
மண்ணுலகில் ஊழ்த்துவிட்ட மன்னுயிர்கள் அத்தனையும்
தன்வழியில் ஓர்முடிவைத் தானெடுத்து அவ்வழியே
சிந்தனையை ஓர்முகமாய்த் தேர்ந்தழகாய் வாழ்கையிலே
விந்தையென ஆறறிவால் மேன்மையுற்ற இந்தியர்நாம்;
மோழையெனத் தான்மயங்கி மூலையிலே குந்திவிட்டு
சூழுகின்ற காரெனவே தோன்றுகின்ற வீண்கனவில்
வாழுகின்ற நாள்வரையில் வாழ்வதையா நம்கலாமும்
தாழ்விலாத தன்னுரையாய்த் தந்திடுவார்? இல்லையில்லை!
நீணிலத்தில் காணுகின்ற நேரறிவை நம்வாழ்வில்
வாணுதலின் நங்கையவர் கல்வியதை நம்வாழ்வில்
தேநிகர்த்த நந்தமிழின் மேன்மையதை நம்வாழ்வில்
கானகத்துக் கல்வியினை கற்பதையே நம்வாழ்வில்
ஒன்றெனவே வாழ்ந்திருக்கும் ஒற்றுமையை நம்வாழ்வில்
எண்ணறியா நூல்களுறை நுண்ணறிவை நம்வாழ்வில்
இந்தியர்கை ஒங்கியொரு அறிவியலால் வானகத்து
அண்டவெளி மண்டலத்தை ஆள்வதையே நம்வாழ்வில்
ஓர்கனவாய் இன்றிளையர் ஏற்றிடத்தான் வேண்டுமென்றார்;
ஏற்றமது வாழ்க்கையிலே எத்தனையோ தந்தாலும்
தூற்றுதலும் பாதையிலே சேறெனவே வந்தாலும்
தேர்ந்தெடுத்த நேர்கனவை சீர்கனவாய் போற்றுவமே!
இவண் அன்பன்
இராஜ. தியாகராஜன்.
www.pudhucherry.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-11-19