விழிப்புணர்வு
புண்ணிருந்தால்
ஈக்கள்
மொய்க்கத்தான் செய்யும்
கனியிருந்தால்
கிளி
கொத்தத்தான் செய்யும்
திறந்த வீட்டில்
நாய்
புகத்தான் செய்யும்
கறையை
உன்னில் நிறைத்துக் கொண்டு
குறையை
அன்னியரில் காண முயன்றால்
தரையைத்தான்
நோக்க வேண்டும் கண்கள்
அம்பெய்தவனை
அணுகாமல்
அம்பை நோவதில்
பயனேதுமில்லை
அன்று
பகைவர்களும் பாராட்டும்
பரிசுத்த வாழ்வு
மலிந்து கிடந்தது
இன்று
நட்புறவும் நயவஞ்சகத்தை
மனனம் செய்கிறது
நரியுடன் பழகி விட்டு
உன்னையும் நரியாக
பாவித்துக் கொண்டுள்ளாய்
நரியல்ல நீ
இந்த வனத்திற்கே
வேந்தன் நீ
கடமையை கை விடாமல்
கயமைக்கு தலைவணங்காமல்
ஒரு முன் மாதிரியாக
எழுந்து நில்
அடுத்தவர்களை
உயர்த்துவதாக எண்ணி
உன் புகழை
விளம்பரப்படுத்திக் கொள்ளும்
விநோதமான மார்க்கத்தை விட்டு
விலகி நில்
வீழ்ந்தது போதும்
இனி வாழ முற்படு
சுற்றுப்புறம்
ஒளிர்வதால் மட்டும்
பயனேற்படாது
காரிருளில்
மண்டிக் கிடக்கும்
உன் உள்ளத்தை
முதலில் பண்படுத்து
நம் விளக்கே
நம் வீட்டை
எரிக்கலாமா?
-எம்.ஏ.சலாம்-
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-05-24