யார் நீ?
பாதையில் பெருங்கல் ஒன்று
விழுந்திருக்கக் கண்டேன்
அதை அப்புறப்படுத்தியது என் தவறோ?
கல் என்னைப் பார்த்து
கனி மொழியில் கூறியது
யார் நீ?
எங்கிருந்து வருகிறாய்?
நீ இந்நாட்டுக்குரியவனாகத் தெரியவில்லையே!
இந்நகருக்குப் புதியவனா நீ?
இங்குள்ள பழக்க வழக்கங்களை
அறிய மாட்டாயா நீ?
உன் சிந்தனை வேறுபட்டு நிற்கிறதே!
யார் நீ?
எங்கிருந்து வருகிறாய்?
நேற்று ஆவேசமாக வந்த கூட்டத்திலிருந்து
ஒருவன் என் மீது தடுக்கி விழுந்து விட்டான்
அவன் தோழர்களின் காலடியிலேயே
அவன் மிதிபட்டான், உதைபட்டான்,
நசுக்கி எறியப்பட்டான்
யாருமே அவனை கண்டு கொள்ளவில்லை
யாருமே அவனுக்கு ஆதரவு தரவில்லை
ஓடோடி சென்று விட்டார்கள்
ஆனால் நீ .....
தடைபட்ட கல்லை அப்புறப்படுத்துகின்ற நீ .....
இல்லை, நீ இந்நகரவாசியே அல்ல!
எங்கிருந்து வருகிறாய் நீ?
- எம்.ஏ.சலாம் -
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-05-24