2, கடிதம்
கவிஞன் என்றாய்
“கவிதைகள் ஐம்பது ” என வெளியிட்டாய்
இரண்டு கிடைத்தது, மற்றவை?
புலம்பல்களுக்கும் சாடல்களுக்கும்
புரட்சி தலைப்பிட்டிருந்தாய்
காலரை தூக்கி கால் வீசி நடந்தாய்
உணர்ச்சிபூர்வமானவன் கவிஞன் என
உருவேறியிருந்த எங்களுக்கு - நீ
ஒரு மின்சார தாக்குதல்
சண்டையிடும் சகாக்கள் இருவரை
சலனமின்றி கடந்து
“ சமூக நீதி ” கவிதையை
சமூகத்திற்கு அர்ப்பணித்தாய்
முறுகக் காயும் வெயிலில் பிச்சை கேட்ட
முதியவரை விரட்டி
கார் கண்ணாடி உயர்த்தி
“கருணைமழை” கவிதையை
கண்பார்வையற்றோருக்காக என்றாய்
வெகுளியுமில்லை, வேதாந்தியுமில்லை
ஏழையுமில்லை, ஏமாளியுமில்லை -பின்பு
எப்படி கவிஞனாவாய்?
அடிப்படையில் மனிதனாகு
அதன்பிறகு கவிஞனாகலாம்
அச்சக உரிமையாளரான நீ
கவிதைத் தொகுப்பென ஒன்று
தாராளமாய் வெளியிடலாம்
யாராலும் தடுக்க இயலாது - ஆனால்
வாசகர் நலனுக்காக இரு வேண்டுதல்
1.அட்டையின் மேல் “அபாயம்” என்றும்
2. இரு கவி தந்த கவியின் பெயர் முன் “ உபயம்” என்றும்
அச்சிட வேண்டும்.
By ( M. Padmapriya )
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-03-27