01.
கூடை
--------------
ஏழெட்டு கூடைகளோடு
என் மகன் .
மண்ணள்ளி விளையாட
ஒன்று
தம்பிக்கென்றான்.
அப்பாவிடம் ஒன்றை கொடுத்து
கவிதை எழுதும் காகிதத்திற் கென்றான்.
இது
பிளாஸ்டிக்பைக்கு பதில்
கடையில் பொருள் வாங்க வென்றான்
ஆத்தா
வெற்றிலை பாக்கு வைத்துக்கொள்ள
ஒன்றை
ஊருக்கு அனுப்பச் சொன்னான்
குடத்தடி கொடிமல்லி பூப்பறிக்க
இது அக்காவுக் கென்றான்
கூடைகளுக்கெல்லாம் கொண்டாட்டம்
குதித்து குதித்து
குப்புற விழுந்து சிரித்தன.
ஊரில் பார்த்த
ஓலை குட்டான்
கடவாய் பொட்டி
சாணி அள்ளும் தட்டுக்கூடை
ஈச்சமிளாறில் செய்த
நெல் தூற்றும் கூடை
அவித்த நெல்லை அள்ளும் கூடை
நெல்லரைக்க போய்
தவிடள்ளும் கூடை
பனையோலை கிழித்து
மூங்கில் சீவி
முடைந்த கூடை
ஞாபகம்.
அழகு கூடையொன்றில்
அள்ளி கொடுத்தான்
அம்மாவுக்கு தன்
முத்தங்களை.
வரைய சொன்ன ஆசிரியையிடம்
கூடை ஒன்றை கொடுத்து
அதில்
நட்சத்திரங்களை போட சொல்லி
நின்றான்
வெறுங் கூடை
நிறைய நிறைய
கனவுகள்.
02.
நினைவுகளே நீளுவதால்....
--------------------------------------
நினைவுகளே நீளுவதால்
நேரமிருப்பதில்லை
எழுத....
நினைத்தே நினைவுகள் ஓட
எழுதவேண்டிய கடிதமும்
எழுதப்படாத காகிதமாய்.
நலம் விசாரிக்காமலே
நலமென்றே
நம்பும் நினைவுகள்....
நித்தம்
ஆடி ஓடிய அசதிக்குப்பின்னும்
அலுக்காத நினைவுகள்....
நினைவொளி
நிலவுநெஞ்சம் வழிய
இரவும் விழியும்
ஈரம்.
நினைப்பதை நிறுத்தி
நினைத்ததை எழுத நினைத்தால்
நினைத்தது நினைத்து
நீளும் நினைவு.
நினைத்ததை எழுதாமல்தான்
இருந்தேனென்றால்
நினைத்ததைப் பேசாமல்கூட
போய்விட்டேன்
நேற்று உன்னை நேரில் பார்த்தும்.
நீளும் நினைவுகள்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01