01.
மூவுதடுகளின் இழை விளிம்பில்
-------------------------------------------
மையத்தில் குவிந்திருந்தது
கட்டுமான கவிதை சூத்திரம்
பிறர்நிலை
தன்னிலை
மனநிலை
சூழ்நிலை
திடீரென மையமற்றதில்
ஏறியதொரு பழஉண்ணி
அடிமன இயல்பின் இயல்பாய்
விளிம்பிற்கு நழுவும்
மும்மனத்தில் முன்னங்கால்களற்ற
அது தொக்கி நிற்கிறது
இழை விளிம்பில்
அபூர்வ தேநீர்
மூவுதடுகளை
ஒன்றாய் கொட்டி
வேக்காடு சரியான பின்
காத்திருக்கிறேன்
மீண்டுமொரு
காத்திர இரவிற்காய்
எழுத்துக்கள் இப்போது
மரநாயின் பின்னங்காலில்
பயணிக்கிறது
02.
முடிவுறாத கவிதையின் எதிர்காலம்
-------------------------------------------
நிசப்தத்தை மொழிபெயர்க்கும் ஆழியலையினூடே
சுழற்றி வீசப்பட்ட நிராகரிப்பின் நிமிடங்கள்
நிர்வாணியாய் கரையொதுங்கி கிடக்க
நிர்மூலத்தின் மீதூர்கிறது நினைவின் நண்டு
இறந்தகாலத்தை துப்பும் உப்புக் காற்றில்
நிர்க்கதியான வாழ்வின் அழுகல் வாடையை
வட்டமிடுகிறது நிகழ்காலப் பசியின் கழுகு
அதோ
கடலுக்குள் விழுந்து
தற்கொலை செய்யக் காத்திருக்கும்
ஆதவனில் எரிகிறது
முடிவுறாத கவிதையின் எதிர்காலம்
03.
துடிக்கிறது இரட்டைக்கிளவி
------------------------------------
பேச்சின் எச்சில் தெறித்த காலத்தின் மீது
நடைபிண வாழ் தவமிருந்தவனை
மௌன மரணம் முத்தமிடுகிறது
உருவகம்
படிமம்
எதுகை மோனை
குறியீடு
எதற்குள்ளும் அடங்கா
உயிர்ப் பிரிகையில்
துடிக்கிறது இரட்டைக்கிளவி
அவதானியுங்கள்
அங்கொருத்தி
மொழியல்லா பெயர்த்தெழுதலில்
அழுதுக்கொண்டிருக்கும் காதலை
இதயம் கிழித்து காட்டுகிறாள்
சிவக்கிறது
பேரண்ட பெருவெளி
04.
பழைய கண்ணீரின் உப்புக்கறை
----------------------------------------
உணர்ச்சியின் உளி கொண்ட
பைத்திய சிற்பிகள் வெடித்தழும்
சிதைவுகளின் ஓங்கார இரவில்
குரூர அன்பின் குருதி மழை
வாழ்வியல் கத்தியின் கைப்பிடியில்
பழைய கண்ணீரின் உப்புக்கறை
இரக்கமற்ற மவுனத்தீயிலிட்டே
எரித்த இதயமெங்கும் ஊமைக்காயம்
இனி
வலியின் கதை மீட்ட
விலா எலும்பே சாணைக்கல்
நில்லுங்கள்
தீட்டிய மனநோயை
கூர் பார்த்து வருகிறேன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-12-31