விடுதலை வேண்டும்
சத்தி சக்திதாசன்
அந்தி நேரத்தில் அதே மரத்தின் கீழ்
அமர்ந்து நான்
அதே இசையத் திரும்பக் கேட்க வேண்டும்
என்னை சுற்றி இயங்கும் இந்த இயந்திரங்களை
எறிந்து விட்டு பச்சைப் புல்லு
அதன் காதோடு ஓர் கதை
சொல்ல வேண்டும்
அதற்கொரு நிஜமான விடுதலை வேண்டும்
பச்சைக்கிளி தன் குஞ்சுகளுக்கு கிள்ளை
மொழியில் பாடும் அந்தத் தாலாட்டைக்
கேட்க நீண்டதொரு நிசப்தம்
வேண்டும்
காக்கா தன் கூட்டில் வளர்த்த அந்தக்
குயில்க் குஞ்சை இனம் கண்டு விரட்டும்
போது கரையும் காரணங்களை அறிய
சலனமற்ற அமைதி வேண்டும்
அதற்கொரு சிக்கலற்ற விடுதலை வேண்டும்
கடற்கரை மணலினிலே நான் வரைந்த
சித்திரத்தை தேடிவந்து அழிக்கும்
அந்தக் கடலலையின் ஆசையின்
ஓசையை நான் கேட்க அமைதி வேண்டும்
ஒற்றுமைக்கோர் உதாரணமாய் உலகில்
ஒழுங்குமுறைக்கோர் எடுத்துக்காட்டாய்
ஓயாத உழைப்பின் வடிவமாய்
உணவு சேர்க்கும் அந்த
எறும்புகளின் அணிவகுப்பின் ஆணையைக்
கேட்க ஆசை ,அதற்கான அமைதி வேண்டும்
வித்தியாசமான விடுதலை வேண்டும்
வண்ணப்பூக்களின் வர்ணமெடுத்து சிறகமைத்த
வண்ணத்திப்பூச்சியின் சிறகெழுப்பும் அந்த
ஓசையின் ஆழத்தைக் கேட்க ஓர்
அமைதி வேண்டும்
தேனெடுத்துத் தான் சுவைக்க மலரை மயக்க
தேனீ பாடும் அந்த சங்கீதத்தின்
சந்தங்களை முழுவதுமாய் அறிய
ஒருமணி நேரம் அமைதி வேண்டும்
விடியா இரவுகளில் இருந்து விடிவு தர
ஓர் விடுதலை வேண்டும்
என் தாய் நடந்த மண் கண்மூடி நாளாச்சு
நான் தவழ்ந்த முற்றம் முழுதாய்
ஓரிரவு தலை சாய்த்து வருஷங்கள்
பலவாச்சு அதற்கெனவே
நீண்டதொரு அமைதி வேண்டும்
இருள் சூழ்ந்த ஈழத்தின் குழந்தைகள்
இதயத்துத் தோட்டத்தில்
மகிழ்வெனும் முல்லை படர மாறாத
அமைதி வேண்டும்
நிச்சயமாய் ஓர் விடுதலை வேண்டும்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-04-30