சொறி நாய்களின் கட்சி
-----------------------------
இலாபகரமான முதலீடு
அரசியல் கட்சி தொடங்குவது.
எனதூர் சொறி நாய்கள் கூட
உழைக்கத் தயாராகிவிட்டன
புதிய கட்சிகள் திறந்து
நாய்களுக்குப் பேரானந்தம் நக்குவது.
சமூகத்தின் மார்க்கத்தின் பெயர்களை அடுக்கி
ஊருக்கொரு கட்சி
கட்டி முடித்துக்கொள்ளுமிச் சொறி நாய்கள்.
பேராசை, “தேசியத் தலைவர்” கொம்பு
முளைக்க வேண்டுமென்ற.
மூன்று நான்கு அமைச்சு, வர்சையாய் வாகனங்கள்
அரசாங்க அரண்மனைச் சுகங்களாகியவற்றை
துப்பனி வழிய நக்குவதற்கென்றே
நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டலைகின்றன.
பெரும் பாதுகாப்பு கையிலொரு கட்சி.
வேசையோடு நடுத்தெருவில் படுத்தாலும்
தலைவராயிருந்தால் “பத்வா” வழங்கிப் பாதுகாப்பார்கள்
சமூகத்தைச் சிங்களக் கட்சிகளிடம்
பெரும் விலைக்கு ஏலமிட்டு
மொத்தத் தொகையையும் சுருட்டலாம்.
வாய் பேசவே மாட்டார்கள்
தேசியப் பட்டியலுக்கு காசு கட்டிக் காத்திருப்போர்
கள்ளன், காவாலி, பொண்பிடியன்களை
அதியுயர்; பீடத்திற்கு நியமித்தாலும்
ஆதரவுக் குரல் தர
முண்டியடித்து வருவார்கள் அடிவருடிகள்
கழுதை பன்றிகளை காசுகொடுத்து வாங்கி
சில சொறி நாய்கள்
கூட்டமைப்பு சேர்த்து கொண்டாடிக் குதிக்கின்றன
முஸ்லிம்
முதலமைச்சர்
சுயாட்சி
தனித்தரப்பு இவ்வவசியங்களை
மாங்காய் தேங்காய் மண்ணாங்கட்டிபோல் பரப்பி வைத்து
வீதியோர வியாபாரம் செய்வதற்கு
பொருத்தமான கட்சி கூட்டமைப்புத்தான்
மாகாணத்தின் பெயரில் சுயேட்சை கட்சி தொடங்கினால்
கூட்டு வியாபாரம் புரிந்து சம்பாதிக்க இலகு
படித்த எருமை மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள
எம்பி ஆசை.
அரசியல் கட்சி ஆரம்பிப்பது உண்மையில்
ஆதாயமான பங்குச் சந்தை வியாபாரம்
உம்மா பெயரில் இன்றைக்கு!
முஸ்லிம் அரசியல் கட்சிகள்
நாளை முளைக்கும்
கள்ளப் பொண்டாட்டிகளின் பெயர்களில்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-04-01