கனவு.. கலையாய் ஒரு கதை சொல்கிறேன்

01.
கனவு
----------

என் கனவுகளுக்கும்
நிறமிருப்பதாய்ச் சொன்ன போது
குறுக்கும் நெடுக்குமாய்
கல்லறைகள் எழும்பின

கர்ப்பம் சுமக்க மட்டுமே
கனவுகள்... என்றாகி
பிரசவிக்க முடியாது
பிதற்றிக் கொண்டு
முக்கோடி வருடங்கள்
கடந்து வந்த சகோதரிகளுக்கு

இரத்தமும் சதையுமாய்
உங்கள் குறைமாத்ததுக்
குழந்தை போலாகாமல்
விதைத்தவர்கள் தோட்டத்திலேயே
நடக்க மறுத்தது
என் கனவுகளின் கால்கள்

நான் பிடுங்கப்பட வேண்டிய களைதான்
என்று ஆற்றாதவர்
அரிவாலோடும்
அவர்களுக்கேயான பகற்கனவோடும்...

பயத்தின் சிரத்தைக்
கொய்து எடுத்த பின்
எனது கைவிலங்குகள்
உடைக்கப்பட்டன
சிறைக் கதவுகள்
திறக்கப்பட்டன

ஒவ்வொரு விடியலிலும்
திணிக்கப்படும் கனவை
தின்று தணிக்கிறது
எனது விழி

என் கனவின் நிறங்கள்
கோர்த்தெடுத்து
வானவில்லைத் தரையிறக்கிப்
பரந்து வாழப்
பாலம் கட்ட...
இதோ
எனது முதற் கல்.

நான் இதுதான்
இப்படித்தான்
என்றால் மட்டுமே
சாத்தியமாகிறது.

என் கனவு

02.
கலையாய் ஒரு கதை சொல்கிறேன்
---------------------------------------

எங்கள் ஊரில்
ஆயிரங்காலத்து முன்னிருந்து
அழகான ஆலமரம் ஒன்றிருந்தது

தம் வீட்டு முற்றத்தில்
ரோஜாக்களை வளர்போர் பலர்
ஆலையை பழசென்று ரசிப்பதில்லை

இருந்தும் அது
விழுதுகள் விட்டு
விழுதுகள் முட்ட
ஓங்கி வளர்ந்தது.
ஆதில் இளைப்பாறுதல் சுகம்
பலருக்கு

பார்வைக்கு எட்டா கறையாண்கள் சில
மண்முட்டிய விழுதுகளை
ஆங்காங்கே அரிக்கத் தொடங்கின.
வேர்களிலும் படரத்தவித்தன.
புற்களும் பதர்களும்
ஆலையைச் சுற்றி வளர்ந்தன.

தம் வீட்டு ரோஜாக்களைத் தவிர
யாருக்கும் விழுதுகள் அழிவதில்
அக்கறையில்லை.
பலருக்கு நேரமில்லை.
சிலருக்கு ஊர்மரத்துக்கு
உரம் போடுதல் கௌரவக்குறைச்சல்.

ஓடி ஓடி கரையாண்களை
ஓட்ட நினைத்தனர்தான் சிலர்
கத்திக் கத்தி அவை
களைய நினைத்தனர்தான் பலர்.

அவர்கள்
பைத்தியம் என்று
பரிகாசிக்கப் பட்டனர்.

இருவருக்குமிடையே...
மௌனம் மையங்கொண்டது
மௌனம் பாதுகாப்பானது

அங்கே
மௌனமே உத்தமம்
மௌனமே சௌகரியம்
யார் சொன்னது மௌனம்
சம்மதமென்று?
மௌனம் ஒரு தப்பிப்பு

ஆழ்ந்த மௌனத்தில்
ஆலை சாயப்போவதை
அலறிப்போன காற்றை
உணர்ந்தும் உரைக்காத
முற்றிலும் மயான மௌனம்

நாளை
கறையாண்கள் அகற்றிய பின்
ஆலை தரும் சுகத்தை
குந்தியிருந்து சுவைக்க
வரலாம்
மௌனித்திருந்த உத்தமர்கள்.

நான்
உங்களைச் சொல்லவில்லை.

-சுரபி

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-02-06 00:00
Share with others