போர்முனை இரவுகள்
--------------------------

வேதாளம் சொல்லும் கதைகளின்
விடை தெரியாக் கேள்விகளால்
சிதறுண்டு போகும்
சில மனிதரைப் போல...

புரியாத காட்டின்
வழி தெரியாத போக்கனாய்...
நான்

அரசியல் குப்பை பொறுக்கி
அதை எரிக்கும்
முறை தெரியாமல்...

எரிந்துதான் போவரோ
என் சனமும்

தெறித்து விழுந்த
குழந்தையின் உரு
உன் கனவிலும் அழுததுண்டா

இடம் பெயரும் உறவுகளின் வலி
விஷம் தோய்ந்த முனைகளாய்
குத்துவதுண்டா

பதினாங்கு வயதில்
வீராச்சாவு எய்திய தம்பி
உன் மூடிய கண்களுக்குள்
புருவம் உயர நிற்பதுண்டா

நாம் விளையாடிய வீதிப்புதரில்
அக்காள் அம்மனமாய் கிடந்த
அந்தநொடி
வாழ்ந்து பாத்திருகிறாயா நீ?

எல்லாம் உறிஞ்சித் தின்ற
வேதாளங்கள் துணையொடு
இன்னும் எத்தனை வருட
பயணமிது

நம்பிக்கையில் தள்ளிப்போடப்பட்ட
மரணங்கள்
இன்னும் எத்தனை நாள்
உயிரோடிருக்கும் சொல்

கொன்று குவிந்த என் சனத்தில்
ஒருவனுக்காவது
கருவறை கட்ட முடியுமா உன்னால்
எடுபட்ட பயமவனே
எந்தப் புண்ணாக்குப் பதிலும் வேண்டாம்
புரிந்துகொள்ளேன்
உயிர் பற்றியாவது!

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-04-16 00:00
Share with others