அர்த்தமற்ற அஸ்தமனம்
----------------------------
ஆதவன் மறைந்தான் என்றால்
அது நமக்கு மட்டும்தானே,மறைந்தான்.
மறு பாதிக்கு உதித்து ஒளி வீச
நம் கண்ணிலிருந்து விடுபட்டான்,
என்பதுதானே உண்மை.
துயில் கலைந்த சூரியன்
மலை முகட்டிலிருந்து
வெளியே வந்தான் என்ற ரீதியில்
கவிதை வேறு!
களைத்த கதிரவன்
மேற்கே இளைப்பாறினான் என்ற
வசனம் வேறு.
நமக்கு மட்டும் தெரிந்தவன்
ஊருக்கே ஒளியூட்டினான்
என்று எப்படி ஏற்கலாம்
நமக்கு மட்டும் மறைந்தவனை ,நாம்
உலகுக்கே மறைந்தான் என்று ,
எப்படி கொள்ளலாம்?
இப்படித்தானே -
நமக்கு நல்லது செய்ய வாய்ப்பு
கிட்டாதவனையெல்லாம் எல்லோருக்கும்
கெட்டவன் என்று திட்டித் தீர்க்கிறோம்.
தேர்ந்தெடுத்து ஒரு சாராருக்கே
உதவுபர்களை உத்தமன் என்று
போற்றி பாடுகிறோம்
அறிவிலிகளாய் ,ஆதவனையே விமரிக்கும் நாம்
அற்ப மானிடனை விட்டு வைப்போமா.
எனக்கு நீ கெட்டவன் என்றால்
யாருக்கும் நீ நல்லவனாக முடியாது.
என்ன ஒரு தீர்ப்பு!
அடுத்தவர் விமர்சனங்கள்
அத்தனையும் சத்தியமல்ல
சொன்னவர்கள் எவரும்
தெளிந்தவர்கள் அல்ல
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-12-15