கனவாய் மறந்து போய்விடுமோ
வெள்ளைப் பனி நாட்டினிலே
வெறுமைத் தனி சிறையினிலே
உள்ளம் தடுமாறுதையோ - எம்
உயிரும் நொந்து போய்விடுமோ
விருட்சமாய் வளர்ந்த எம்மை
வேரறுத்து பிடுங்கி வந்து
பதி வைத்தால் முடியுமோ - எம்
பசுமை மீண்டும் வந்திடுமோ
இளந்தென்றல் காற்றில் சிரித்தும்
இளவேனிலிற் காய்ந்து உலர்ந்தும்
மாரியில் தழைத்து மலர்ந்தும் -எம்
மனதினில் பூரித்தது மறந்திடுமோ
செம்பாட்டு மண்ணில் சிவந்தும்
செந்நெற் கழனியில் உழைத்தும்
பாட்டினில் களைப்பு மறந்தும் - எம்
பண்பாட்டில் உயர்ந்தது அழிந்திடுமோ
அப்பன் அம்மா பேச்சினிலே
அன்னை தமிழின் மூச்சினிலே
செல்வம் கொழித்த மண்ணினிலே - எம்
சிரித்த இதயம் அழுதிடுமோ
ஆலய மணியின் ஓசையினிலே
அருளும் அன்பின் மூச்சினிலே
பெரியவர் புரவலர் சேர்த்துவைத்த - எம்
பெருமை எல்லாம் மறைந்திடுமோ
புரவிகள் பாய்ந்த புரங்களும்
புகழுடன் வாழ்ந்த இடங்களும்
கட்டி வைத்த கோட்டைகளும் - எம்
கனவாய் மறைந்து போய்விடுமோ
தமிழின் புகழும் அழிந்திடுமோ
தரணி எம்மை மறந்திடுமோ
யாரெனக் கேட்கும் சரித்திரம் - நாம்
யாரெனச் சொல்வோம் சந்ததிக்கு
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01