மரியாதை… எங்கே.. ஏன் மட்டம்…
--------------------------------------
01.
மரியாதை…
-------------
எங்கள் மந்தையில்
கறுப்பு ஆடுகள்தான்
கண்டுகொள்ளப்படுகின்றன,
வெள்ளை ஆடுகள்
வெறுக்கப்படுகின்றன,
விரட்டி அடிக்கப்படுகின்றன –
நாங்கள்
வான்மேகங்கள்…!
02.
எங்கே…
---------
நாயது சுருட்டிவைத்திருக்குது
நன்றியை
நன்றாய்த் தன்வாலில்,
அதன்
எஜமான் அதை
எங்கே வைத்திருக்கிறான்
என்பதே தெரியவில்லை…!
03.
ஏன் மட்டம்…
--------------
பூமிக்குப் போர்வையாய்
பச்சைக் கம்பளம் -
அநதப் புல்வெளியில் தெரிகிறது
அகிலத்தின் அழகு,
அழித்து அதைமேயும்
ஆட்டு மந்தை,
ஆடுகளை வேட்டையாடும்
ஓநாய்க் கூட்டம்,
ஓட ஓட விரட்டி
ஓநாயை; கொல்லும்
கொம்பன் காளை,
அதன்
ஜம்பம் பலிப்பதில்லை
சிங்கத்திடம் -
அடிபட்டு ஆவி துறக்கிறது..
இப்படித்தான் செல்கிறது
இதையே சொல்கிறது
இயற்கைச் சட்டம்…!
இந்த மனிதன்மட்டும்
ஏனித்தனை மட்டம் -
தனியே ஒரு சட்டம்
தன்னினத்தையே
அழித்திட மட்டும்…!
-செண்பக ஜெகதீசன்…
(www.geocities.com/vsnjag/)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-04-14