நெருக்கம்… சங்கடம்தான்… சேதி...
சொன்னால்தான்..
01.
நெருக்கம்..
-----------------
மஞ்சத்தில் வரும்
நெருக்கம்
நெஞ்சத்தில் வராதபோது,
மனித வாழ்வில்
பஞ்சமாகிவிடுகிறது
நெஞ்சில் நிம்மதி…!
02.
சங்கடம்தான்..
-------------------
சமையல் சரியில்லையெனில்
சங்கடம் ஒருநாள்,
சரியில்லாத சாகுபடியால்
சங்கடம் ஓராண்டு,
சம்சாரம் சரியில்லாதபோது
சங்கடம்தான் வாழ்வே…!
03.
சேதி..
------------
படுக்கப்போன நீ
அடுத்த நாளில்
விழித்தெழுந்தால்தான்
உன்காதில்
விழும் ஒரு சேதி-
விடிந்துவிட்ட சேதி,
இல்லையேல்
அடுத்தவர் காதில்
விழும் ஒரு சேதி -
உன்கதை
முடிந்துவிட்ட சேதி...!
04.
சொன்னால்தான்..
----------------------
இரவில் .
இவள் தூங்காததைக்
காட்டிக் கொடுத்துவிடுகின்றன
கண்ணிமைகள்,
காரணம் -
சுகமான சுமையோ
சோகத்தின் சுமையோ..
அவள்
சொன்னால்தானே தெரியும்…!
-செண்பக ஜெகதீசன்…
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-02