1.மரித்துப்போன சொற்கள்
---------------------------------
சொற்கள்
நாவில் ஒட்டிக்கொண்டு
பல் இடுக்குகளுக்குள்
மாட்டிக் கொண்டு
கருப்பைக் கருவாய்ச்
வாய்க்குள்ளேயே
முடங்கிப் போய்
‘நல்லவன்’ பட்டம்
கிடைக்குமென்று
தயங்கித் தயங்கி
அமுங்கிப் போனதால்
‘பொதிகழுதை’ யாக
நாம்!
உணர்வுகள்
கொல்லுவதும்
கொலைதான்
சொற்கள்
தற்கொலை
செய்து கொண்டதால்
நடைப்பிணங்களாக நாம்!
2.சுவர்கள்
------------
அது தடை ஓட்டம்
அங்கீகரிப்புச் சுவர்
புத்தியின் வேரிலிருந்து
தன்நம்பிக்கையின்மையாக
தயக்கமாக
பயமாக
தடித்து முளைக்கிறது
மீண்டும் மீண்டும்!
உடைத்துக் கடக்க வேண்டும்
உளிகளும் கோடறிகளும் இருக்க
நகங்களால்
பிறாண்டிக் கொண்டிருக்கிறோம்
ஒன்றை உடைத்துப் போட்டு முன்னேற
அடுத்த சுவர் எழுகிறது
தடைகளைக் கடந்து
ஓட்டம் நிறைவு செய்து
முகக்கண்ணாடிகளை
உறித்துப் போட்டபிறகுதான் தெரிகிறது
சுவர்களெல்லாம் வெறும் கானல் பிம்பங்களே என்று!
ஓடுபாதையை
குழந்தைகள்
கண்களை மூடிக் கொண்டு
எளிதாக ஓடிக்
கடந்து போகிறார்கள்!
பயிற்சி எடுக்க வேண்டும்
குழந்தைகளிடம்!
- இராம. வயிரவன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-18