நீயுமா புரூட்டஸ் ?
நெஞ்சத்தின் சோகத்தையும்
நிகழ்வுகளின் பாரத்தையும்
நீ கொண்டு துவண்டபோது
நானுன்னைத் தேற்றினேன்....
உறவுகளின் பிணைப்பினால்
உள்ளத்தில் வடுக்களோடு
உணர்வுகளால் துளைக்கப்பட்டு
உடைந்து போன உன்னை
தூக்கி நானும் நிறுத்தி
தோளில் நன்றாய்த் தாங்கி
நேரான வாழ்க்கை நோக்கி
நடைபோட உதவினேனே.....
தோழா !
காலமகள் தோட்டத்திலே
காற்றின் திசை மாறியதால்
கண்ணீர் காய்ந்து உன் முகம்
கவலை மறந்து சிரிக்கிறது
வாழ்வென்னும் பாதையிலே
கடந்து வந்த பாதையெல்லாம்
கண்ட மனிதர் பலரும் இன்று
கத்தி முதுகில் ஏற்றினாரே !
ஒரேயரு கத்தி மட்டும்
ஓரடி ஆழப் பாய்ந்து என்னை
ஒருமுறை அலற வைத்தது
ஓரக்கண்ணால் திரும்பிப் பார்த்தேன்
ஜயகோ !
கத்தியை ஏற்றிய கை
ஏற்றியபடி நிற்கின்றாய்
எனதருமை நண்பன் நீ
என்னெஞ்சில் ஒரு நினைவு
அன்றொருநாள் ரோமாபுரியிலே
யூலியஸ் சீசர் முதுகில் கத்திகள்
திரும்ப்பிப் பார்த்தவன் திகைப்புடன்
" நீயுமா புரூட்டஸ் " என்கிறான்
என்னெஞ்சைத் தைத்த முட்களில்
எண்ணத்தினால் தாலாட்டிய
என் இனிய நண்பன் நீ
எறிந்த முள்ளே ஏனோ
அதிகமாய் வலிக்குதடா !
-சக்தி சக்திதாசன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-18